News Just In

2/16/2024 10:37:00 AM

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் காவல் அரண் திறந்து வைப்பு - பதில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை




கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அருகில் புதிய பொலிஸ் காவல் அரண் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (15) இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கூறுகையில்,

நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலை பாரிய இடம் வகிக்கிறது. நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலிருந்தும் நோயாளர்கள் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக இங்கு வருகை தருகின்றனர். எனவே நாம் அவர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.மேலும் தேசிய வைத்தியசாலையின் அண்மித்த பகுதியில் இன்று (நேற்று) முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பாதாளக்குழு உலகின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்ற செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விசாரணை நடத்தி அதனை எதிர்காலத்தில் முடிவுக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், நாட்டில் இருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறான 42 குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்

No comments: