இசை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் தற்கொலைக்கு முயன்ற ஒருவரின் உயிரை காப்பாற்றிய ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரோஜா திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.
இவர் 6 தேசிய விருதுகள், 32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA2 விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், கிராமிய விருதுகள் என பல்வேறு விருதுகளை பெற்று இசை உலகில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ள தகவல் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
மலேஷியாவைச் சேர்ந்த இசையமைப்பாளரான செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
”2015-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவு நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். அப்போது திடீரென்று என் நண்பரிடம் இருந்து எனக்கு மெசெஜ் வந்தது. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை கேட்க வேண்டும். கண்டிப்பாக உனக்கு பிடிக்கும் என தெரிவித்திருந்தார்.
அந்த பாடல் ஓகே கண்மணி படத்தில் இடம் பெற்ற “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” பாடல். அதனைக் கேட்டப் பிறகு என் மனம் எப்படி மாறியது என்று தெரியவில்லை.
திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு என் அறையை பூட்டிக் கொண்டேன். விட்டுக்கொடுக்காத வாழ்க்கை எவ்வளவு மதிப்புள்ளது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
இந்த பாடல் என் உயிரைக் காப்பாற்றியது. என் வாழ்க்கையில் என்னை காயப்படுத்த எத்தனை முட்கள் காத்திருந்தாலும் நான் இன்னும் நடந்து கொண்டே இருப்பேன்’ என செல்வகுமார் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த ட்விட்டருக்கு ஏ.ஆர்.ரஹ்மான், “எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்க வளமுடன்” என பதிலளித்திருந்தார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
No comments: