கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் எதிர்நோக்கும்; காணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தேசிய பொருளாதார உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையிலும் காணிகளை அரசு தரப்பு கையகப்படுத்தி வைத்திருக்கும் விடயம் சம்பந்தமாகவும் காணிகளை மீட்டெடுக்கும் யுக்தித் திட்டமிடல் பற்றிய கலந்துரையாடலும் செயலமர்வும் இடம்பெற்று வருவதாக காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.
இது விடயமாக விழிப்புணர்வூட்டல் செயலமர்வு ஒலுவில் தனியார் விடுதியில் சனி ஞாயிறு (17>18-06.2023)ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காணி உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக நிகழ்வை ஆரம்பித்து வைத்துக் கருத்துத் தெரிவித்த நிஹால் அஹமட், காணிகள் விடயத்தில் சகல சமூகத்தாரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்வின்றித் தொடரும் இந்தக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.
காணிப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்கும் தேசிய காணி கொள்கைக்கான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இந்தக் கலந்துரையாடல் வாய்ப்பளிக்கும்.
திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 4652 குடும்பங்களினது 14127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் உள்ளன.
இது விடயமாக கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.
பயிற்சிச் செயலமர்வை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சமூக ஊடகப் பிரிவு இணைப்பாளர் சம்பத் சமரகோன், காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியின் அலுவலர் சந்துன் துடுகல ஆகியோர் நடத்தினர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: