News Just In

4/23/2023 05:31:00 PM

வடக்குக் கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணியும் ஆதரவு!

ஜனநாயகத்தை படுகொலை செய்யும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கக்கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை (25.04.2023) இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்குத் ஈரோஸ் ஜனநாயக முன்னணியும் தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை (23.04.2023) வெளியிட்டுள்ள அவ்வூடக அறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு;

நாட்டு மக்களையும், மாற்று அரசியல் சிந்தனையாளர்களையும், சமூக அரசியல் செயற்பாட்டாளர்களையும் அடக்கி ஒடுக்கி விட்டு நாட்டுக்குள் காட்டு அரசாங்கமொன்றை அமைக்கும் செயற்பாடாகவே இச்சட்டம் அரங்கேறவுள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அரச ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுக்காதவாறு இருக்கும் சட்டத்தை, இன்னும் பயங்கரமாக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் கொண்டு வரும் அதிகாரவர்க்கத்தின் சூழ்ச்சிகளை முறியடிக்க நாட்டு மக்களும், ஜனநாயகத்தை மதிக்கின்ற சகல சமூக, அரசியல் சக்திகளும் கைகோர்த்துக் கொள்ளவேண்டும். அந்த வகையில் நாளைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி முழுமையான ஆதரவை வழங்கும்.

ஒருகாலத்தில் தமிழ் மக்களையும், முற்போக்கு அரசியல் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து உருவாக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டம் அன்மைக் காலங்களாக சிங்கள மக்களையும் இளைஞர்களையும் இலக்கு வைக்கப்பட்ட போது அதன் பயங்கரத்தை உணர்ந்தவர்களாக புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக இன்று கிளர்ந்தெழுந்துள்ளார்கள். முழு நாட்டு மக்களும் இச்சட்டத்தின் காட்டு மிராண்டித்தனத்தை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். இச்சட்டம் நிறைவேற்றப்படுமானால், மக்கள் சுதந்திரமாக மூச்சு விடுவதற்கான உரிமை கூட பறிக்கப்படலாம். ஆட்சியாளர்களின் அடாவடித்தனத்திற்கெதிராக குரல்கொடுக்கமுடியாமல் போகலாம். உலகநாடுகளில் நமது நாடு அந்நியப்பட்டுக் கூட போகலாம்.

ஆகவே பாராளுமன்றத்தின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் போது மக்கள் பிரதிநிதிகள் மக்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து நடந்துக் கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே தான் ஜனநாயகத்தை அழியாது பாதுகாக்க முடியும் எனவும் அவ்வூடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments: