News Just In

3/21/2023 01:23:00 PM

எமது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு மிக்க பிரஜைகள் நாமே!




ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

அல்ககோல், மதுசாரம், போதைப் பொருள் பாவனைகளின் தீங்குகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் வகையிலமைந்த தெருநாடகமும் போதைப்பொருள் பாவனை இல்லாத இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளிலமைந்த உறுதியுரை ஏற்றலும் கிராம இளைஞர் யுவதிகளின் முழுப் பங்கேற்புடன் கிராமங்கள் தோறும் முன்னெடுக்கப்படுவதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் அலுவலர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

சட்டவிரோத மது உற்பத்தியும் பொதுவாகவே அல்ககோல் நுகர்வும் போதைப் பொருள் பாவனையும் இளம் சிறார்களின் வளமான எதிர்காலத்தை நாசமாக்குகிறது என்ற தொனிப்பொருளை அடியொற்றி பிரதேச இளைஞர் யுவதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெருநாடகமும் உறுதியுரை ஏற்றலும் விழிப்புணர்வூட்டலும் செவ்வாயன்று 21.03.2023 மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா, பன்சேனை ஆகிய கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்பிப்பு நிகழ்வில் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் அலுவலர் அனுலா அன்ரன், கண்காணிப்பு மற்றும் மீளாய்வு இணைப்பாளர் எஸ்.ஜோன்சன், இணைப்பாளர் ரீ.ஆர். மார்ஷல், மற்றும் அலுவலர்களான ஜி; நிதுஷ்காந்த், ஏ. அபிலாஷினி உட்பட இளைஞர் கழகத் தலைவர்களான எஸ். பிரவீனா, ரீ. சஞ்சீவ், கே. டிலோஜினி உட்பட கிராம மக்களும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

பிரதேச இளைஞர் யுவதிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு சிறுவர் நிதியத்தின் பங்களிப்புடன் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனம் நிதி அனுசரணை வழி காட்டலையும் வழங்குகின்றது.

வுவுணதீவுப் பிரதேச செயலகப் பிரவுலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த போதைப் பொருள் மற்றும்; மதுசாரப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரம் தமது சொந்த சமூகத்திலிருந்தே செயற்படுத்தும் நோக்கத்துடன் தொடுவானம் இளைஞர் கலைக் கழகத்தினால் விழிப்புணர்வு நாடகங்கள் வடிவில் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிராமப் புறங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மத்தியில் திட்டமிட்டு நுகரச் செய்யப்படுகின்ற இந்த போதைப் பொருள் தீமையை ஒழிப்பதற்கு பிரதேச சமூக இளைஞர் யுவதிகள் ஒருங்கிணைந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தமக்குப் பெருத்த நிம்மதியை அளிப்பதாக இந்த விழிப்புணர்வு நிகழ்வு குறித்து கருத்து வெளியிட்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


No comments: