News Just In

2/06/2023 02:08:00 PM

சூழலைப் பராமரிக்கத் தவறியதன் விளைவாக நாட்டை அச்சுறுத்தும் டெங்கு அபாயம்

( ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை இப்பொழுது அருகி வருகிறது. இயற்கை மனிதனுக்கு வாழ்வளிக்கிறது. வாழ்வைக் கற்றுக்கொடுக்கிறது. இயற்கை இல்லை என்றால் மண்ணில் ஈரமில்லை… விளைச்சலில்லை… அறுவடையில்லை… மனித வாழ்க்கை இல்லை. ஏன் உயிரினங்களும் கூட இல்லை.


இயற்கைதான் உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் வாய்ப்பை வழங்கி வருகிறது.இத்தகைய இயற்கையோடு ஒத்துணர்வு பெறுவதே ஒரு சிறந்த மனிதரின் மதமாகக் கொள்ளப்படலாம். இயற்கைதான் உண்மையின் தோழமை.


இயற்கை என்ற சொல் பழந்தமிழில் “இயல்பு” என்ற பொருளில் வழங்கியது. “செயற்கைக்கு மாறானது” என்ற பொருளும் உண்டு. ஆனால், தற்காலத்தில் மனிதன் இயற்கைக்கு நிரந்தரத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதால் இந்த உலகம், மனிதர்களும் இன்னபிற ஜீவராசிகளும் வாழ்வதற்கு இலாயக்கற்ற ஒரு இடமாக மாறிக் கொண்டிருக்கின்றது.

நமது நாட்டில் சூழல் சுத்தமாகப் பேணப்படாததினால் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்து மனித உயிர்களும் காவு கொள்ளப்படுகின்றன.இது விடயமாக தனது ஆதங்கத்தை முன் வைக்கிறார் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன். இதுபற்றி அவர் கூறும்போது,

சமகாலத்தில் நெருக்கடியாக எதிர்nhகண்டுள்ள உயிர்க்கொல்லி நோயைப் பரப்பும் நுளம்புத் தாக்கத்தையும் நுளம்புப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் மிகவும் திருப்தியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏனென்றால் டெங்கு நேயைப் பரப்பும் நுளம்பு சிறியளவான மழைத்துளி தேங்கும் இடங்கள் தொடக்கம் கிணறுகள், எங்கெல்லாம் நீர் தேங்கி நிற்கின்றதோ அங்கெல்லாம் பெருகுவதற்குரிய வாய்ப்புக்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தரையும் சரி முழு இலங்கையைப் பொறுத்தவரையிலும் சரி திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் காணப்படுகின்ற குறைபாடுதான் டெங்கு நுளம்பு வீரியமாகப் பல்கிப் பெருகுவதற்கும் டெங்கு நோய்த் தாக்கத்திற்கும் காரணமாய் அமைந்து விடுகிறது.

அந்த அடிப்படையில் ஒவ்வொரு பிரஜைகளும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டை உணர்ந்தவர்களாக டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான இடங்களைத் தங்களது வீட்டிலும் அயல்புறங்களிலும் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் மற்றும் நீர் தேங்கக் கூடிய அனைத்து இடங்களையும் நீர் தேங்கி நிற்காமல் பராமரிக்க வேண்டும்.
அத்துடன் நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய கொள்கலன்களை அகற்றுவது முக்கிய பொறுப்பாக இருக்கின்றது.

ஆகவே இந்த ஆட்கொல்லியான டெங்குவின் பாரதூரத்தன்மையை உணர்ந்தவர்களாக பொதுமக்கள் இருக்க வேண்டும். பொதுமக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

பொதுமக்கள் என்று கூறும்போது இளைஞர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள், நிறுவனங்களைச் சார்ந்தோர்கள். பொலிஸார், சுகாதாரத் துறையினர், திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்தவர்கள,. மத அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர்கள் என்பதோடு முக்கியமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இதில் உள்ளடங்குவார்கள்.

எல்லோருமாக ஒருங்கிணைந்தால்தான் இந்த ஆட்கொல்லி டெங்கு நோயின் அபாயத்திலிருந்து வெளி வர முடியும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைப்பருவகாலம் தொடங்கி விட்டால் ஒவ்வோர் ஆண்டும் டெங்கு நோயின் தாக்கம் மிகப் பெருத்த அளவில் இருக்கின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகிய 830 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.” என்றார்.

நாட்டில் இடம்பெற்று வந்த ஆயுதப் போராட்ட அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட போதிலும் இன்னமும் சில இயற்கை இடர்களுக்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்க வேண்;டியுள்ளது.

வருடத்தின் தொடக்கமும் இறுதிக் காலாண்டும் வழமையாக மக்களை அச்சுறுத்தும் காலப்பகுதியாகவே அமைந்து விடுகிறது. ஓகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்கும் இத்தகைய பயங்கரம் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள மக்களை வாட்டி வதைக்கிறது.

டெங்கு, மண் சரிவு, வெள்ளம், புயற்காற்று, சூறாவளி, இடி மின்னல் இப்படிப் பல்வேறுபட்ட இயற்கை இடர்கள் நாட்டு மக்களை அச்சுறுகின்ற போதிலும் அவ்வப்போது ஏற்படும் டெங்கு நோயின் அபாயமே பாரதூரமாக நாட்டு மக்களைப் பீதி கொள்ள வைத்திருக்கின்றது.

டெங்கு அபாயம் என்பது நாட்டின் சூழமைவுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பகுதியோடு மட்டுப்படுத்தப்பட்டதல்ல.ஆயினும் டெங்கு நுளம்புகளின் தாக்கம் வருடத்தின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் தலையெடுத்து நாடு பூராகவும் உயிர்களைக் காவு கொள்ளும் கிலியை ஏற்படுத்தி விடுகிறது.
இதன் தாக்கம் இளையோர் முதியோர் என்று எவரையும் விட்டு வைப்பதில்லை.

கொழும்பில் தொடங்கி வடக்கே யாழ்ப்பாணம் கிழக்கே மட்டக்களப்பு, தெற்கே ஹம்பாந்தோட்டை வரையில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் பரவலாகக் காணப்படுகின்றது.டெங்கு நுளம்புகளினால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுமுள்ளனர்.

இந்த விதமாக மிக மோசமாகப் பரவி பலரது உயிர்களைக் காவு கொள்ளும் பயங்கரத்தைக் கட்டுப்படுத்த அரசும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டில் டெங்கு நோய்க்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப் பட்டிருப்போருக்கு விஷேட சிகிச்சையளிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று விஷேட பயிற்சி பெற்று நாடு திரும்பிய வைத்திய நிபுணர்களும் உண்டு.

இந்த வைத்திய நிபுணர்கள் இங்குள்ள வைத்தியர்களுக்கு தாம் பெற்ற விஷேட பயிற்சியை வழங்கியிருக்கிறார்கள்.டெங்கு என்பது வைரசினால் ஏற்படுகின்ற ஒரு நோயாகும். ஈடிஸ் எயிப்டியை மற்றும் எல்போபிக்டஸ் எனும் இருவகை நுளம்புகள் மனிதனைக் கடிப்பதால் இந்நோய் உண்டாகிறது.

தேங்கி நிற்கும் நன்நீரில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகின்றன. குறிப்பாக வீட்டை அண்டிக் கிடக்கும் வெற்றுத் தகர டப்பா, சிரட்டைகள், சட்டி பானைத்துண்டுகள், தயிர்ச் சட்டிகள், பூச்சாடிகள், கிணறுகள், நீர் தேங்க வசதியாகவுள்ள டயர்கள், நீர்த் தொட்டிகள், நீர்த் தாங்கிகள் போன்றவையே டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் என பூச்சியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே இப்படி நுளம்புகள் உற்பத்தியாவதற்கு ஏதுவாக இருக்கக் கூடிய இடங்களை, சூழலை இல்லாமல் செய்வதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுத்து அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்கின்றனர்.

No comments: