( ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் புதிய யுகத்துக்கு இலங்கை நுழைந்துள்ளதாகத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்,கனிய வளத் துறையில் சவுதி அரேபியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
படு கடனிலிருந்து இலங்கை மீண்டெழ வகுக்கப்பட்டுள்ள புதிய வியூகங்கள்,
கனிய வளத் துறையில் முதலீடுகள் பிரதான இடம் வகிக்கிறது. உலக பொருளாதார நெருக்கடி மற்றும் கனிமவளத் துறை எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகளை "கனிய வள எதிர்கால அமைப்பு" முன்வைத்துள்ளது என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற "எதிர்கால கனிய வள அமைப்பு" கூட்டத்தின் முடிவில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் நஸீர் அஹமட் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்ததாவது,
கடன் பொறி, வெளிநாட்டு நாணயங்களின் தட்டுப்பாடுகளால்தான், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
நேச நாடுகளின் ஒத்துழைப்புடன் நெருக்கடியில் இருந்து மீள்வது தான் இலங்கையின் பிரதான இலக்கு. இதற்கு சவுதி அரேபியாவின் ஒத்துழைப்பும் இலங்கைக்கு அவசியப்படுகிறது. கனிய வளத்துறையில் முன்னேறுவதற்கு இலங்கையின் இயற்கை
வளத்துறையில் சவூதி அரேபியா முதலிட வேண்டும்.கனிய வளத்துறையிலான முதலீடுகள், கூட்டு ஒப்பந்தங்கள் என்பனவே எமது நாட்டுக்கு அவசியம். இவ்வாறான ஒத்துழைப்புக்களை "எதிர்கால கனிய வள அமைப்பு" வழங்க முடியும்.இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்தும் இலங்கை இதையே எதிர்பார்க்கிறது.
"எதிர்கால கனிய வள அமைப்பு" சவூதியின் கைத்தொழில் துறைக்கு மிகச்சிறந்த தொழிலாளர்களைப் பெற்றுத் தருகிறது. கடந்தகால சவால்களில் இருந்து எமது நாடு படிப்படியாக மீண்டு வருகிறது. இலங்கையின் இயற்கை வளங்கள் மற்றும் கனிய வளத்துறைகளில், வெளிநாட்டு முதலீடுகளைச் சாத்தியப்படுத்துவதனூடாகவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியைப் போக்க முடியும் என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டார்.
No comments: