News Just In

12/08/2022 07:16:00 AM

உலக சிறுவர் தினத்தினையொட்டி மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்!









Jana Ezhil

உலக சிறுவர் தினத்தினை கொண்டாடும் வகையில் யுனிசெப் மற்றும் செரி நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று   (7) மட்டக்களப்பு சர்வோதய நிலையத்தில் இடம் பெற்றது.

பிரதி வருடமும் நவம்பர் மாதம் இருபதாம் தேதி உலக சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இம்முறை மட்டக்களப்பு மாநகர சபை,, ஏறாவூர் நகர சபைகளின் ஒத்துழைப்புடனும், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களின் பங்களிப்புடனும் இச்சிறுவர் தின நிகழ்வுகள் இடம் பெற்றன.

சிறுவர்களின் திறன்களையும், ஆற்றல்களையும் வெளிக்கொண்டு வரும் வகையிலும் அவர்களை உள ரீதியாக ஆற்றுப்படுத்தும் வகையிலும் என பல்வேறு நிகழ்வுகள் மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி பூங்கா பணிக் குழுவினரின் வழிகாட்டலில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சிறுவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா. மதிவண்ணன், பிரதி ஆணையாளர். உ.சிவராசா, ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீத், யுனிசெப் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகர்களான க்யூரே யூ மற்றும் திருமதி தில்ருக்‌ஷி பிருந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் எபநேசர் தர்ஷன், திட்ட இணைப்பாளர்களான ரினோசா பிரசன்னா, மைக்கல் நிரோசன் மற்றும் சிறுவர் பதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் விஷேட அம்சமாக சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாகவும், அவர்களுக்குள்ள சுதந்திரங்கள் மற்றும் தலைமைத்துவ பண்புகள் என்பன தொடர்பாகவும் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு தெளிவுறுத்தப்பட்டதையும் குறிப்பிடத்தக்கது.









No comments: