News Just In

12/06/2022 02:11:00 PM

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 11வது சர்வதேச ஆய்வரங்கு




நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 11வது சர்வதேச ஆய்வரங்கு இன்று 06.12.2022 அப்பீடத்தின் கேட்போர் கூடத்தில் “சிறந்த பங்காளிகளுடன் இணைந்து நிலைபேறான அபிவிருத்திக்கான தற்கால நெருக்கடிகளை முகாமை செய்தல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வின் வரவேற்புரையினை ஆய்வரங்கின் இணைப்பாளர் எம்.எல். பௌசுல் அமீர் நிகழ்த்தினார். தலைமை உரையினை பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் வழங்கினார். இந்நிகழ்வின் பிரதம அதிதி தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உரையாற்றினார்.

உபவேந்தர் தனது உரையில் சமகால இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கு வழிவிடுவதாக ஆய்வுகள் அமைய வேண்டும் என்பதுடன் அதில் சமூக அறிவியல் மற்றும் மனிதப்பண்பியல் துறையின் முக்கியத்துவத்தினை சிலாகித்துப் பேசினார். அத்துடன் அத்துறை தொடர்பான ஆய்வுகள் மேலும் விரிபுடுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும் எடுத்துக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஆய்வரங்கின் இணைச்செயலாளரும் புவியியல் துறைத் தலைவருமான கே. நிஜாமிர் முதன்மைப் பேச்சாளரை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியரான சங்கைக்குரிய பேராசிரியர் பின்னவல சங்கசுமண தேரர் முதன்மைப் பேச்சாளராக zoom தொழில்நுட்பத்தினூடாக கலந்து சிறப்பித்தார்.

சமகால உலக நெருக்கடிகள் இலங்கையின் நெருக்கடிகள் மற்றும் அவற்றை வெற்றிகொள்வதற்கான தந்திரோபாயங்கள் குறித்தும் உரையாற்றியதுடன் இவற்றினை சமூக அறிவியல் மற்றும் மனிதப்பண்பியல் துறை ஆய்வுகள் எவ்வாறு கையாளுகின்றன? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் கருத்துதெரிவிக்கையில் சமூக அறிவியல் மற்றும் மனிதப் பண்பியல் துறை ஏனைய துறைகளை ஊடறுத்துச் செல்லும் விதம் குறித்தும் சமூக அறிவியல் ஆய்வுப் பரப்பினை விஷ்தரிப்பதனூடாக சமகால நெருக்கடிகளை கையாளும் வழிவகைகள் குறித்தும் அவரது உரை கவனம் செலுத்தியது.

நிகழ்வில் நன்றியுரையினை ஆய்வரங்கின் இணைச்செயலாளார் ஐ.எல்.எம். ஸாஹிர் வழங்கினார். இந்நிகழ்வில் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், நூலகர், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவி பதிவாளர், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், போதனைசாரா ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


No comments: