News Just In

10/25/2022 08:20:00 PM

வளவாளர்களை வலுப்படுத்தும் - சுனாமிக்கான தயார்நிலை செயலமர்வு!!

வளவாளர்களை வலுப்படுத்தும் - சுனாமிக்கான தயார்நிலைப்படுத்படுத்தல் மூன்று நாள் வதிவிட பயிற்சி செயலமர்வொன்று இன்று (25) திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகோன் தனியார் விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னாயத்த திட்டமிடல் பணிப்பாளர் சுனில் ஜெயவீர தலைமையில் நடைபெற்ற வளவாளர்களை பயிற்றுவிக்கும் குறித்த பயிற்சி செயலமர்வில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் எஸ்.சஹீட் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி முன்னாயத்த உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சதுண லியன ஆராட்சி, யூ.என்.டீ.பீ நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மஞ்சுள பண்டார, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ், அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் மொகமட் றியாஸ், வலய இணைப்பாளர்கள், கோட்டக்கல்வி இணைப்பாளர்கள், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் இணைப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆசிய பசுபிக் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக இடம்பெறும் குறித்த வதிவிட பயிற்சிச் செயலமர்வானது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 17 பாடசாலைகளின் அனர்த்த முன்னாயத்த திட்ட இணைப்பாளர்களை சுனாமிக்கான தயார்நிலைப்படுத்துவது தொடர்பாக வலுப்படுத்தும் முகமாகவே இச்செயலமர்வு அமைந்துள்ளது.

அனர்த்த முன்னாயத்தம், கிராம மட்ட முன்னெச்சரிக்கை, முப்படையினர் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், அனர்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வழமையான செயற்பாடுகள், அனர்த்த காலங்களில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியும் இத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: