News Just In

9/05/2022 10:58:00 AM

மண்ணெண்ணெய் பிரச்சனையால் பாதிக்கப்படும் மீனவர்கள்!





மீன்பிடி அமைச்சின் ஊடாக மீனவர்களுக்கு ஜக்கிய நாடுகளில் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் மீன்பிடித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தோணி மீனவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஜக்கிய நாடுகளில் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் நிதியுதவியளிக்கப்பட்ட இந்த அவசரநிலை உதவித் செயல்திட்டமானது இலங்கையின் மிகவும் வறிய நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் நலிவுற்ற மீனவர்களின் உடனடி உணவுப் பாதுகாப்பு தேவைகளை அடையாளப்பபடுத்தும் வகையில் மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறிய அளவிலான ஆற்றில் தோணி மூலம் மீன் தொழில் செய்யும் மீனவர்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை வழங்கும் குறிக்கோளுடன் மூன்று மாதங்களுக்கு மாதம் ஒன்றிற்கு பதினையாயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள தோணி மூலம் ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு முதல்கட்டமாக பதினையாயிரம் ரூபாய் குடும்ப கஷ்டத்தினை கருத்தில் கொண்டு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள தோணி மூலம் ஆற்றில் மீன் பிடிக்கும் 4870 மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டதுடன், ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள 99 மீனவர்களுக்கும் கோறளைப்பற்று மத்தியிலுள்ள 49 மீனவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த உதவித் திட்டம் மூலம் வழங்கப்பட்ட நிதி உதவியால் எங்கள் குடும்பத்தின் கஷ்ட நிலைமை ஒரளவு தீர்க்கப்பட்டுள்ளதுடன் நிதி உதவியை வழங்கிய ஜக்கிய நாடுகளில் உணவு மற்றும் விவசாய நிறுவனத்திற்கும் மீன்பிடித் திணைக்களத்திற்கும் மீனவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

அத்தோடு தற்போது நாட்டில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தோணி மூலம் மீன் பிடிக்கும் மீனவர்களாகிய நாம் பெரிதும் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றோம்.

இரவு நேரங்களில் மீன் பிடிப்பதற்கு டோச் லைட்டை கொண்டு மீன் பிடிப்பது கஷ்டமாகவுள்ளதுடன், டோச் லைட்டை பயன்படுத்தினால் மீன்கள் ஓடி விடும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் எங்களது மீன் பிடித் தொழில் முற்றாக பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது.

மண்ணெண்ணெய் மூலம் விளக்கு பயன்படுத்தினால் மாத்திரம் வெளிச்சம் பரவலாக காணப்படுவதால் எங்களுக்கு மீன் பிடிப்பதற்கும் மீன் பிடிபடுவதற்கும் இலகுவாக காணப்படும்.

எனவே எங்களது தோணி மூலம் மீன் பிடித்தொழிலை திறம்பட மேற்கொள்ள மண்ணெண்ணெய் பிரச்சனையை தீர்த்து, மண்ணெண்ணெய் விலையை குறைத்தோ அல்லது குறைந்த மானியத்தில் வழங்கியோ எங்களது தொழிலை மேற்கொள்ளவும், எங்களது குடும்ப கஷ்டத்தினை சீர்செய்யவும் உதவுமாறு மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித் - )



No comments: