News Just In

9/19/2022 09:14:00 PM

மட்டு. மாநகர சபையினால் பனிச்சையடி 'ஐ' வலய இரண்டாம் குறுக்கு வீதியானது தார் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.




எழுச்சி மிகு" மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட திராய்மடு இரண்டாம் வட்டாரத்திற்குட்பட்ட பனிச்சையடி 'ஐ' வலய இரண்டாம் குறுக்கு வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 02ம் வட்டார உறுப்பினர் திருமதி பற்றிமா பால்தசார் அவர்களின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 2 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியானது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

மாணவர்கள், நோயாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தமது போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்க இயலாத வகையில் பல ஆண்டு காலமாக குன்றும் குழியுமாக கவனிப்பார் அற்று காணப்பட்ட இவ்வீதியானது மட்டக்களப்பு மாநகர சபையின் சொந்த நிதியில் 4 மீற்றர் அகலமும் 220 மீற்றர் நீளமும் கொண்ட வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மாநகர சபையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொறுப்பேற்ற காலம் தொடக்கம் பல்வேறு அபிவிருத்தி பணிகளை வெவ்வேறு திட்டங்களின் ஊடாக செயற்படுத்தி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக தற்போது மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது பதில் முதல்வர் க.சத்தியசீலன் கருத்து தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் வரிப்பணம் முறையாக மக்களுக்கே சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் ஊழல் அற்ற முறையில் நேர்த்தியாக அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், இதேபோல் எதிர்வரும் காலங்களிலும் மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கிவரும் அனைத்து தரப்பினருக்கும் முதல்வர் உள்ளிட்டவர்களின் சார்பில் தாம் நன்றிகளை கூறிக் கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

மேற்படி வீதியின் அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் பதில் முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர்களான திருமதி பற்றிமா பால்தசார், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ். மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் டி.ஜே.கிறிஷ்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.



No comments: