
(சுதா)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி எதிர்நோக்கும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழும் மக்கள் தம் உதிரத்தினை கொடுத்து எமது உடன்பிறப்புகளின் உயிரைக்காக்க முன் வரவேண்டுமென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் தினமும் சராசரியாக 40 முதல் 50 பைன்ட் உதிரம் அவசர தேவையுடைய நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் இரத்தவங்கியில் குறைந்த அளவிலான உதிரம் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக வைத்தியசாலையில் கடமையாற்றும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். முன்பு 700 தொடக்கம் 800 பைன்ட் உதிரம் சேமித்து வைக்கப்பட்டு இருந்துவந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் எனும் அடிப்படையில் ஒரு மனித உயிரினை காப்பாற்றும் பொறுப்பு சக மனிதனின் கடமையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல தடவை உதிரம் வழங்கியுள்ள போதிலும் தற்போதைய தேவை கருதி மீண்டும் அவர்கள் இரத்ததான முகாம்களை நிறுவி உதிரத்தினை சேகரிக்க முன்வரவேண்டுமென எதிர்பார்க்கப்படுவதுடன், உதிரம் கொடுத்து உயிர்காக்கும் உன்னத பணியினை இளைஞர், யுவதிகள் அனைவரும் இணைந்து நிறைவேற்ற முன்வர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments: