News Just In

8/16/2022 11:13:00 AM

பின்னாட்களில் மனச்சாட்சி உறுத்தும் மறுபக்கத்தையும் கவனத்தில் கொண்டு ஊடகவியலாளர்கள் மனிதாபிமானத்துடன் பணியாற்ற வேண்டும்..
-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பின்னாட்களில் மனச்சாட்சி உறுத்தும் மறுபக்கத்தையும் கவனத்தில் கொண்டு ஊடகவியலாளர்கள் மனிதாபிமானத்துடன் பணியாற்ற வேண்டும் என மட்டக்களப்பு எமாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் ஊடகவியலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சமூக ஊடகவியலாளர்களுக்கு ஊக்கவிப்பு உதவித் தொகை வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரனிடம் கல்குடா மீடியா போரம் தலைவர் எம்.ரீ.எம். பாரிஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மாவட்டத்திலுள்ள 30 ஊடகவியலாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் ஊக்கவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் நிஹாறா> தியாகி அறக்கொடை நிதியத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளருமான எம்.என். நைறூஸ்> கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம். நளீம ஆகியோரின் பிரசன்னத்துடன் நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து ஊடவியலாளர்களை விழித்து உரையாற்றி மாவட்டச் செயலாளர் கருணாகரன்>

இந்த ஊக்குவிப்பு உதவு தொகையை உங்களுக்கு வழங்கிய தியாகேஸ்வரன் ஒரு பரோபபகாரி. அடுத்தவருக்கு இன மத பேதமில்லாமல் உதவும் கொடை வள்ளல்களில் அவரும் ஒருவர் என்பதை அவரது செயல்பாடுகளைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது.

தற்போது நாடு முனம் கொடுத்திருக்கின்ற பொருளாதார நெருக்கடி மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு வகையான இன்னல்கள் இவற்றுக்கிடையே ஊடகவியலாளர்களின் பணி மிகவும் காத்திரமானது.

மிகவும் அவதானமாக முன்னெடுக்க வேண்டிய பணி இது. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்லின சமூக கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்கின்றார்கள்.

மிக விரைவாக அபிவிருத்தியை எதிர்பார்த்திருக்கின்ற ஒரு மாவட்டம். இந்த வேளையிலே தமிழ் முஸ்லிம் சமூக ஊடகவியலாளர்களை கச்சிதமாக ஒருங்கிணைக்கும் தொடக்கப் புள்ளியை செய்து வைத்தமைக்காக கல்குடா மீடியா போரம் எனது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரித்தாகின்றது.

பொதுவாக ஒரு சம்பவத்தைச் செய்தியாக்கிச் சொல்வதுதான் செய்தி என்கின்ற ஒரு காலகட்டம் ஒன்றிருந்தது.

செய்தியை எவ்வாறு வெளிக் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் எனும் காலம் மாறிவிட்டது. தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சி காரணமாக இது நடந்துள்ளது. கஷ்டமான பணியை கச்சிதமாகச் செய்வதுதான் ஒரு சிறந்த ஊடகவியலாளரின் பணியாக இருக்கும்.

மனச்சாட்சி உறுத்தும் பக்கத்தையும் ஊடகவியலாளரி;கள் பார்க்கத் தவறக் கூடாது.

எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை உண்டென்பதுபோல ஒவ்வொன்றுக்கும் அடுத்த பக்கமும் உண்டென்பதை ஊடகவியலாளர்கள் புரிந்து கொண்டு செயலாற்றினால் சிறப்படைவீர்கள்.

மன உறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஊடகவியலாளர்களின் வரலாறுகளும் நமக்குப் படிப்பினையாக உள்ளன.

செய்திகளைச் சேகரித்தோம் பிரசுரித்தோம் ஒலி ஒளிபரப்பினோம் என்றில்லாமல் மக்களால் கேள்வி கேட்கப்படும் ஒரு கட்டத்தில் மனச் சாட்சியால் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் ஒரு நிலை வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதே சிறப்பு.

பல நல்ல விடயங்களை அதிகமதிகம் ஆக்கபூர்வமான விடயங்களை ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். மனிதாபிமானம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் சமூக மாற்றத்திற்காக நீங்கள் உங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

நல்லிணக்கம் இன சௌஜன்யத்துக்கு ஊடவியலாளர்களின் பணியும் பங்களிப்பும் இன்றியமையாதது. எதிர்காலத்தில் சமூகமும் இந்த மாவட்டமும் முழு நாடும் முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடியவர்கள் ஊடவியலாளர்கள்தான். இதனை நீங்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைக்கும் பல செய்திகளை நமது பழைய ஊடகவியலாளர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்கள். அவர்களை இன்றளவும் காலம் மதிக்கிறது. உங்களையும் எதிர்காலம் மதிக்க நீங்கள் இப்பொழுதே மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுத்துப் பணியாற்ற வேண்டும்.” என்றார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை தனி ஒவ்வொரு மனிதனும் நேசிப்பதன் மூலம் நாட்டில் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியை கொண்டு வரமுடியும் இதனை தமிழ்> முஸ்லிம் ஊடகவியலாளர்கள் செயலில் சாதிக்க முடியும் என கல்குடா மீடியா போரம் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம் பாரிஸ் தனது நிகழ்வின் தலைமை உரையில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் அனைத்து இன மக்களுக்கும் பொதுவானவர்களாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

No comments: