News Just In

7/25/2022 12:57:00 PM

யானையின் கால்களில் சிக்கிய எறும்புகள் என்று ரணில் போராட்டக்காரர்களை நினைக்க கூடாது - அரசாங்க பொது ஊழியர் சங்கம் எச்சரிக்கை




நூறுல் ஹுதா உமர்

காட்டுமிராண்டித்தனமாக நடந்து போராட்டக்காரர்களை அடக்க முற்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஆள தகுதி அற்றவர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு இது குறித்து இவர் தெரிவித்தவை வருமாறு

அமைதி வழியில் கலைந்து செல்வதற்கு தயாராக இருந்த போராட்டக்காரர்கள் மீது அதிகாலையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை எல்லோருடனும் சேர்ந்து நாமும் வன்மையாக கண்டிக்கின்றோம். முப்படையினருக்கு திட்டமிட்ட வகையில் கூடுதல் அதிகாரம், அனுமதி ஆகியவற்றை வழங்கி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்த ரணில் விக்கிரமசிங்க உடனடியாக ஜனாதிபதி பதவியை துறக்க வேண்டும்.

அவசர கால சட்டத்தின் கொடூரங்களை காலம் காலமாக அனுபவித்தவர்கள் தமிழர்கள், தமிழர்களை அவ்விதம் அடக்கி ஆண்டு வந்த அனுபவத்தை சிங்கள பெரும்பான்மை மக்கள் மீது பிரயோகித்து வெற்றி காண முற்பட்டு உள்ளார்கள். நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மாத்திரம் அன்றி உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் படையினரின் பேயாட்டத்துக்கு உட்பட்டு பாரதூரமாக பாதிக்கப்பட நேர்ந்தது. இதையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.நாட்டின் தலைவர் என்கிற வகையிலும், பாதுகாப்பு அமைச்சர் என்கிற வகையிலும் இம்மிலேச்சத்தனமான தாக்குதலுக்கான தார்மீக பொறுப்பை ரணில் விக்கிரமசிங்க ஏற்று பதவி விலக தவறினால் அவருக்கு எதிரான சூறாவளி போராட்டம் தொடரும்.

யானையின் கால்களில் சிக்கிய எறும்புகளாக போராட்டக்கரர்களை நினைக்க வேண்டாம். கோத்தாவுக்கு ஏற்பட்ட நிர்க்கதிதான் ரணிலுக்கும் நேரும் என்பது திண்ணம். பதவி ஏற்று 24 மணித்தியாலங்கள் கழிவதற்கு முன்பாகவே சர்வாதிகாரியாக நடந்த ரணிலை நாட்டு மக்களும், நாமும். போராட்டக்காரர்களும் நம்பி நடப்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது என்றார்


No comments: