News Just In

6/16/2022 02:22:00 PM

வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு சமூகக் குழக்களின் திறன்களை மேம்படுத்தல் வேலைத் திட்டம்!




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையில் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு சமூகக் குழுக்களின் திறன்களை மேம்படுத்தல் தொடர்பான வேலைத் திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அத்திட்டத்திற்குப் பொறுப்பான முகாமையாளர் ஷாபி நயாஜ் தெரிவித்தார்.

தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் (Centre for Communication Training) ஒருங்கிணைப்பில் காத்தான்குடி கடற்கரையோர விடுதியில் புதன்கிழமை மாலை 15.06.2022 வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான தெளிவூட்டல் விழிப்புணர்வு, தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் தலைமைச் செயற்பாட்டு அலுவலர் பி. பெனிக்னஸின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

இந்த தெளிவூட்டல் விழிப்புணர்வு செயலமர்வில் சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள், மாவட்ட சர்வமத செயற்பாட்டாளர்கள், அரச அலுவலர்கள், இளைஞர் யுவதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இலங்கையில் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான திட்டத்தின் முகாமையாளர் ஷாபி நயாஜ், அதன் சிரேஷ்ட திட்ட அலுவலர் என்.எம். அமில மதுசங்க, திட்ட அலுவலர் மஹேஷா பத்திராஜா, தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் திட்ட அலுவலர் எச்.எம். பாத்திமா சர்மிலா உள்ளிட்ட இன்னும் பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு சமூகக் குழுக்களின் திறன்களை மேம்படுத்தல் திட்டம் மட்டக்களப்பு, மன்னார் வவுனியா, அம்பாறை, கண்டி, குருநாகல் ஆகிய ஆறு மாவட்டங்களில் அமுல்படுத்தப்படுவதாக அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சமூகங்களின் உறுப்பினர்கள் 2400 பேர், 980 இளைஞர் யுவதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள், மாவட்ட சர்வமத செயற்பாட்டாளர்கள், அரச அலுவலர்கள், பொலிஸார், சமூகத் தலைவர்கள் உட்பட 480 பேர் உள்ளடங்கலாக மொத்தம் 10 இலட்சம் பிரஜைகளை இணைத்துக் கொண்டு இத்திட்டம் அமுலாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்சித்திட்டம் தேசிய சமாதானப்பேரவை, ஹெல்விற்றாஸ் ஸ்ரீலங்கா ஆகிய தன்னார்வ நிறுவனங்களின் வழிகாட்டலில் ஜரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்டு வருகின்றது.


No comments: