News Just In

6/10/2022 07:59:00 PM

சுதந்திரபுரம் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 24 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரை நீதி கிடைக்கவில்லை என உறவுகளை இழந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் பகுதியில் 1998ஆம் ஆண்டு இதே போன்றதொரு நாளில், சிறிலங்கா விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதல்களில் பொதுமக்கள் 33 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தப் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணி அளவில் சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது.

அந்தத் தாக்குதலில் தமது நான்கு பிள்ளைகளை இழந்த வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து புஸ்பராசா என்ற தந்தை, அஞ்சலி நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான ஜோன்சன், ஜீவன் மற்றும் குறித்த தாக்குதலில் உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





No comments: