News Just In

4/10/2022 06:45:00 AM

இலங்கையில் நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்!

இலங்கையில் தற்போது வரலாறு கனத்த வகையில் பொருளாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்ட களத்தில் இறங்கினர்.

குறிப்பாக ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகவும், "GO HOME GOTA" என்ற வசனங்கள் பதித்த பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது குறிப்பாக பெரும்பாலான ஆளும் கட்சி அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். ஒரு கட்டத்தில் தற்போதைய அரசு பெரும் பான்மையயும் இழந்தது.

அதனை தொடர்ந்து அரசை மாற்றியமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மக்களின் போராட்டமும் நாளுக்கு நாள் வலுபெற்றுக் கொண்டே செல்கிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் திரளான மக்கள் பலத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்கொழும்பு கிரீன் பார்க் சந்தியில் நீர்கொழும்பு கத்தோலிக்க தேவாலயத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக சிலாபம், நீர்கொழும்பு மற்றும் கிரீன்பார்க் வீதியில் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு விரைவான தீர்வைக் கோரியும் ‘நீதிக்காக’ என்ற தொனிப்பொருளில் கத்தோலிக்க சிவில் சமூக ஆர்வலர்களால் நேற்று அமைதிப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

ஏற்பாட்டாளர்கள் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்திலிருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் வரை பேரணியாகச் சென்றனர். இன்று காலை 10 மணியளவில் நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது.

எனவே கட்டுவாப்பிட்டி தேவாலயம், புனித செபஸ்தியார் தேவாலயம், கட்டுவாப்பிட்டி, கட்டுநாயக்க தேவாலயம், துடெல்ல அடைக்கல மாதா தேவாலயம், கந்தானை - ஹெந்தல சந்தி, எலகந்த ஊடாக கொலக்கிக்கடை தேவாலயம் ஆகிய இடங்களில் முதல் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்றது.

இந்த நிலையில் தற்போது நள்ளிரவை நெருங்கிய போதிலும் மக்கள் அதே பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து அதில் தங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மக்களின் இந்த கொந்தளிப்பான போராட்டத்துக்கு தக்க பதிலை அரசாங்கம் கட்டாயம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தது.

No comments: