News Just In

4/28/2022 01:12:00 PM

பதவி வறிதான ஏறாவூர் நகர சபைக்கு பிரதித் தவிசாளர் தெரிவு




 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பதவி வறிதான நிலையில் காணப்பட்ட ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் இடத்திற்கு அச்சபையின் உறுப்பினரான ஏ.எஸ்.எம். றியாழ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இத்தெரிவு வியாழக்கிழமை 28.04.2022 ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணனின் முன்னிலையில் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஸ், ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் எம்.எஸ். நளிம் நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் ஆகியோரின் பிரசன்னத்துடன் தெரிவு இடம்பெற்றது.

பிரதித் தவிசாளர் தெரிவின்போது ஏறாவூர் நகர சபையின் மொத்தமுள்ள 17 உறுப்பினர்களில் அச்சபையின் தவிசாளர் உட்பட 9 பேர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தனர்.

முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.எஸ்.எம். றியாழின் பெயரை அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரான எஸ்.எம். ஜெமீல் பிரேரித்தார்.

இதன்போது வேறு எவரினதும் பெயர்கள் முன் மொழியப்படாததாலும் சபை அமர்வில் கலந்து கொண்ட ஏனைய ஏழு உறுப்பினர்களும் ஆட்சேபனை தெரிவிக்காததாலும் முன்மொழியப்பட்ட உறுப்பினர் றியாழ் என்பவரையே பிரதித் தவிசாளராகப் பிரகடனப்படுத்துவதாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் சபையினருக்கு அறிவித்தார்.

கட்சி உறுப்புரிமையில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீக்கியதால் ஏறாவூர் நகர சபையின் உறுப்பினராகவும் அச்சபையின் பிரதித் தவிசாளராகவும் செயற்பட்ட மீராலெப்பே ரெபுபாசம்; எனும் உறுப்பினரின் பதவியும் உறுப்புரிமையும் கடந்த 6ஆம் திகதியிலிருந்து பறிபோயிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments: