News Just In

3/19/2022 05:47:00 AM

எரிபொருள் நெருக்கடி வார இறுதியில் முடிவிற்கு வரும்: CEYPETCO தெரிவிப்பு !


நாட்டில் தற்போது காணப்படும் எரிபொருளுக்கான வரிசைகள் வார இறுதியுடன் முடிவிற்கு வரும் என எதிர்பார்ப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் துரிதமாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

தேவையற்ற இடையூறுகள் இன்றி தமக்குத் தேவையான எரிபொருளை மாத்திரம் பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தேவையான எரிபொருளை உரிய நேரத்தில் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க கூறினார்.
எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காத்திருக்கின்றனர்.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் மக்கள் காலை முதல் வரிசைகளில் நிற்பதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
மண்ணெண்ணெய் விநியோகத்திற்கும் வரையறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், நாளை மறுதினம் (20) நாட்டை அண்மிக்குமென எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.

கப்பலில் அடங்கியுள்ள டீசலை எதிர்வரும் திங்கட்கிழமை தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R.ஒல்கா தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் அநாவசியமான முறையில் தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்ததால், அதனை முகாமைத்துவம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R.ஒல்கா கூறினார்.



No comments: