News Just In

3/17/2022 04:31:00 PM

நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது தாக்குதல்: மறுக்கிறது ரஷ்ய படை!

ரஷ்ய படைகளின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்கள், குடும்பத்தை இழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீசி தரைமட்டமாக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மரியுபோலில் உள்ள திரையரங்கு ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட கோர தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் படுகாயமடைந்தனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

இந்த திரையரங்கு மீது புதன்கிழமை (16) ரஷ்ய படைகள் கோரத் தாக்குதல் நடத்தியதாக மரியுபோல் நிர்வாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Maxar செயற்கைக்கோள் திங்கட்கிழமை எடுத்த புகைப்படத்தில், இந்த திரையரங்கு கட்டிடத்தின் முன்னும் பின்னும், மிகப்பெரிய வெள்ளை எழுத்துகளால் ரஷ்ய மொழியில் ‘குழந்தைகள்’ என்று எழுதப்பட்டிருந்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

உக்ரைனின் மரியுபோல் நகரம்தான் மற்ற பகுதிகளை விட ரஷ்ய படையெடுப்பால் உருக்குலைந்து போயிருப்பதாகவும், ஏவுகணை மற்றும் குண்டுவீச்சுகளால் இதுவரை 2,300 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் வசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள், மூன்று வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரினால், ஒரு பக்கம் உயிராபத்துடன், குடிநீர், உணவு மருத்துவ வசதி பெற கடுமையாக போராடி வருகிறார்கள்.

ஆனால், இந்த தாக்குதலை ரஷ்ய படைகள் நடத்தவில்லை என்றும், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments: