News Just In

3/16/2022 08:47:00 PM

சர்வதேச மகளிர் தினமும் முக்காடு சிறப்பு மலர் வெளியீடும்!

தொழில்நுட்ப அறிவை பெறாவிட்டால் எந்த துறையிலும் பெண்கள் முன்னோக்கி பயணிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட நாடும், தேசமும், உலகமும் அவளே என்னும் தொனிப் பொருளிலான சர்வதேச மகளிர் தினமும் முக்காடு சிறப்பு மலர் வெளியீடும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்கள் கருவியை இயக்குகின்ற அல்லது கருவியிலே பரீட்சையமான பெண்மணியாக இருந்தால்தான் அரசியலில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசியலில் மாத்திரமல்ல முன்னனியில் வருவதாக இருந்தால் தொழில் நுட்ப அறிவை உலக வளர்ச்சிக் கேற்ப உடனுக்குடன் உள்வாங்கி மக்களுக்கு தெரிவிக்கக் கூடிய வகையில் தொழில்நுட்ப அறிவை பெறாவிட்டால் எந்த துறையிலும் முன்னோக்கி பயணிக்க முடியாது. தனியாக ஒரு கருத்தை மாத்திரம் வைத்து அரசியலில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்றார்.

பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.நஸீரா, சட்டத்தரணி உதுமா லெப்பை றிஸ்னா பர்வின், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி, செயலக பிரதி திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ஹமீட், பொலிஸ் அதிகாரி எம்.பதுர்தீன், கல்வியலாளர்கள், மகளிர் சங்க பிரதிநிதிகள், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சர்வதேச மகளிர் தினமும் முக்காடு சிறப்பு மலரின் முதல் பிரதி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், நூல் அறிமுக உரையினை ஓய்வுநிலை ஆசிரியை திருமதி.பௌசியா கலீல் நிகழ்த்தினார்.

அத்தோடு சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு, மகளிர் சங்கத்தினருக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், காணி இல்லாமல் அரச காணியியை பராமரித்து வந்த மூன்று குடும்ப பெண்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது காவத்தமுனை அல் அமீன் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம், காவத்தமுனை மகளிர் சங்கத்தினரின் பாடல், மீராவோடை கிராமிய இசைக்குழுவின் கிராமிய இசை நிகழ்ச்சி, கவிதைகள் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments: