News Just In

3/14/2022 06:19:00 AM

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மாநாடு


தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மாநாடு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இம் மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமர சூரிய, மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட தலைவர் சாந்த பத்மகுமார, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் உட்பட பேராசிரியர்கள் சட்டத்தரணிகள் வைத்தியர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் பேசும்போது
கடந்த 74 வருடங்களாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மக்களின் நம்பிக்கையை முற்றாக இல்லாமல் செய்திருக்கின்றார்கள். இன்று நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை வைத்து எங்கள் மீது எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றார்கள். நாட்டில் உள்ள மக்கள் இந்தப் பிரதான இரு கட்சிகளையும் தேர்ந்தெடுப்பது கட்சிகள் மீது உள்ள நம்பிக்கையால் அல்ல. நீலக் கட்சி ஆட்சிக்கு வருகின்ற பொழுது பச்சை கட்சியை சார்ந்தவர்களின் வேலைவாய்ப்பை இல்லாமல் செய்வார்கள், சமூர்த்தி கொடுப்பனவை நீக்குவார்கள், அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்வார்கள். அப்போது மற்ற கட்சியினர் நினைப்பார்கள் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரட்டும் உங்களைப் பார்த்துக் கொள்கின்றோம் என்று. இவ்வாறான மனநிலையில் மக்கள் அவர்களின் கட்சிக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் இதே பணிதான் தொடரும். இவ்வாறுதான் நாட்டை ஆட்சி செய்த இந்த பிரதான கட்சிகள் நாட்டை சூறையாடி நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்றது மாத்திரமல்லாது எம்மை வெளிநாடுகளுக்கு கடனாளியாகவும் மாற்றி இருக்கின்றார்கள்.
எனவே இந்த நிலைமை மாற வேண்டும். ஊழலற்ற வீண் விரயம் செய்யாத நேர்மையான நபர்களைக் கொண்ட ஆட்சி இப்போது நாட்டிற்கு தேவைப்படுகின்றது. அந்த ஆட்சியை சஜித் பிரேமதாச அவர்களுக்கு வழங்க முடியாது ஏனென்றால் அவர்கள் பக்கம் இருப்பவர்கள் எல்லோருமே ஊழல்வாதிகளே! எனவேதான் நேர்மையாக அர்ப்பணிப்போடு நாட்டின் மீது பற்றுள்ள தேசிய மக்கள் சக்தியை ஆரம்பித்திருக்கிறோம்.
இன்று மக்கள் அனைவரும் இந்த ஊழலையும் வீண் விரயத்தையும் மாத்திரம் இல்லாமல் செய்தால் நாட்டை கட்டியெழுப்பலாமா என்னைப் பார்த்து கேட்கின்றார்கள். நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் ஊழல் வீண் விரயம் செய்பவர்களால் ஒரு நாளும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது அதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். எனவே மக்களை வதைக்கும் இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் முன்வந்தால் அதற்கு தலைமை தாங்க நாங்கள் தயார் அதற்காக எதிர்வரும் 18ஆம் திகதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தலைநகருக்கு வாருங்கள் அதில் நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
1. இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்
2. விலைவாசி அதிகரிப்பை உடன் நிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
3. எமது நாட்டின் வளங்களை வெளிநாட்டுக்கு விற்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இக்கோரிக்கைகளுடன் நாம் போராட்டத்திற்குத் தயாராக இருக்கின்றோம். எனவே நாட்டு மக்களுக்கும் கடமை இருக்கின்றது. எமது நாட்டை மீட்டு எடுப்பதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மாத்திரம்தான் எம்மால் சிறந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அவர் தனது உரையில் கூறினார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தில் உப தலைவரும் தேசிய மக்கள் சக்தியும் இரத்தினபுரி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினருமாகிய சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் பேசுகையில் இரத்தினபுரி மாவட்டத்தில் 90000 வாக்காளர் இருந்தும் தேர்தல் காலங்களில் இரு பிரதான கட்சிகளுக்கு வாக்களித்து இருக்கின்றோம் ஆனால் எமது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை தேர்தல் காலங்களில் இனவாதத்தை பேசி வாக்கை சேகரிப்பவர்கள் பின் மக்களை மறந்து ஆட்சியாளர்களுடன் ஒன்றாக சேர்ந்து மக்கள் பணத்தை சூறையாடடுகின்றார்கள்.
மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் நாம் இந்தப் பிரதான கட்சிகளை விட்டு விலகி தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயத் தேவை என குறிப்பிட்டார் இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவிற்கு ஆசிரியர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ஆசிரியர் மாணிக்கம் அசோக்குமார், பாருக் ஆகியோர் சிறுபான்மை ரீதியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
S. Pradeep







No comments: