News Just In

3/13/2022 07:00:00 AM

உக்ரைன் மீதான படையெடுப்பில் புதிய சவாலை எதிர்நோக்கும் ரஷ்யா!

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்ய படைகள் புதிய சவாலை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த போது, ஓரிரு நாட்களில் ரஷியாவிடம் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன.

ரஷ்யாவின் இராணுவம் மற்றும் விமானப்படை இடையே போதுமான ஒத்துழைப்பு இல்லாதது இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதே சமயம் உக்ரைன் குறித்து ரஷ்யா தப்புக்கணக்கு போட்டுவிட்டதாகவும், ‘ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் புடின்’ என்றும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

நெப்போலியன், ஹிட்லர் ஆகியோருக்கு நேர்ந்த அதே கதிதான் புடினுக்கும் நேர்ந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் உக்ரைனை காக்கும் அரணாக தற்போது விளங்கி வரும் ‘ரஸ்புதிட்சா’ எனப்படும் பருவநிலை தான். ‘ரஸ்புதிட்சா’ என்பது உக்ரைன் மக்களையே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும் ஒருவகை வானிலை சீசன் ஆகும். இந்த காலத்தில் ஏற்படும் அதிக மழை மற்றும் பனி காரணமாக சாலை போக்குவரத்து மிகுந்த கடினமானதாக மாறிவிடுகிறது. இதனால் தற்போது ரஷ்யாவின் இராணுவ படை மற்றும் பீரங்கிகள் முன்னேற முடியாமல் திணறி வருகின்றது.

சில இடங்களில் இராணுவ பீரங்கிகளை விடுத்து ரஷ்ய வீரர்கள் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவாலாகவும், மிகப்பெரிய சறுக்கலாகவும் பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாது உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு தேவையான எரிசக்தி மற்றும் தண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1812 ஆம் ஆண்டு பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் படைகள் பின்வாங்கவும், 1943 ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜி படைகள் ரஷ்யாவிடம் வீழ்ந்ததற்கும் இந்த மோசமான வானிலை தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: