News Just In

11/19/2021 06:58:00 AM

என்னுடைய பதவிக் காலத்தில் ஊழல் மோசடிகள், லஞ்சம் என்ற கதைக்கே இடமிருக்காது : தென்கிழக்கு பல்கலை உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ் தாய்மண்ணில் வைத்து அறிவிப்பு!

நான் உபவேந்தராக பதவிவகிக்கும் இந்த காலகட்டங்களில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊழல் மோசடிகள், லஞ்சம் என்ற கதைக்கே இடமிருக்காது. இறைவன் மீது ஆணையிட்டு என்னால் இதை உறுதிபடக்கூற முடியும். கடந்த காலங்களை பற்றி சிந்திப்பதை விட எதிர்காலங்களை பற்றி சிந்திப்பதே பொருத்தமானது. கடுமையாக முயற்சிகள் செய்தால் எதையும் சாதிக்க முடியும். ஏழ்மையில் பிறந்த நான் இவ்வளவு தூரம் உயரக்காரணம் விடாமுயற்சியும், அர்ப்பணிப்புமே தவிர வேறில்லை. கல்விக்கு ஏழ்மை தடையல்ல. முயற்சித்தால் எந்த உயரத்தையும் தொடலாம் என இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது உபவேந்தராக இளவயதில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சமூகவியல் துறையின் முதன்நிலை பழைய மாணவரும், சாய்ந்தமருதில் இருந்து முதற்தடவையாக உபவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவருமான பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களை சொந்த ஊர் மக்கள் கூடி வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு நேற்று (18) வியாழக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மைமூனா அஹமட் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இனவாதம், பிரதேசவாதம் இல்லாத ஒருவனாக நான் எப்போதும் இருந்துள்ளேன். முரண்பாடுகள் இல்லாத பல்கலைக்கழக சூழலை உருவாக்கி மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தையும், இந்த நாட்டையும், எமது சமூகத்தையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்வேன். அதற்கு சகலருடைய ஒத்துழைப்பையும் எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

செராண்டிப் இளைஞர் பவுண்டேஷனின் நெறிப்படுத்தலில் ஈஸ்டர்ன் காஸ்ட் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிடெட், சம்மாந்துறை நபீர் பவுண்டேஷன் மற்றும் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபம் ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளிவாசல், சாய்ந்தமருது உலமா சபை, சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்கம், அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா, பிராந்திய பாடசாலைகள், மருதம் கலைக்கூடல், சாய்ந்தமருது பிரதேச செயலகம் உட்பட முக்கிய சமூக நிறுவனங்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்துகொண்டு பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துள் கரீம், செயலாளர் அப்துல் மஜீத் ரோஷன் மரிக்கார் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எல்.எம். சலீம் (சர்கி) உட்பட உலமாக்கள், மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதம வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம். பாரூக், ஈ.சி.எம். நிறுவன பணிப்பாளர் திருமதி நாபீர் சகுணாஸ், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடாதிபதி, பல்கலைக்கழக பதிவாளர் அப்துல் சத்தார், முதுநிலை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், துறை தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.எம். சம்சுதீன், பிராந்திய பாடசாலை அதிபர்கள், கலை, இலக்கியவாதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்
No comments: