News Just In

11/20/2021 07:11:00 AM

நாட்டை மீண்டும் முற்றாக முடக்க வேண்டிய நிலை ஏற்படும்! - உபுல் ரோஹன

நாட்டில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முன்னர், வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முதலில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த நேரத்தில் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பலர் சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து உல்லாசப் பயணங்களுக்குச் செல்வதாக அவர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், வார இறுதியில் வரவிருக்கும் நீண்ட விடுமுறை நாட்களில் பொது மக்கள் முறையான சுகாதார நடைமுறைகளை தவிர்த்து நடந்து கொண்டால், மீண்டும் நாட்டை முற்றாகப் பூட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களிலும் நாளாந்தம் பதிவாகும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறிப்பாக ஏரிகள், குளங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடும் போதும், கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.

எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு நாடு திறந்திருக்க அனுமதிக்கும் தீர்மானம், பயணங்களுக்கு அனுமதிக்கும் தீர்மானம் என்பன பொதுமக்கள் எந்த அளவிற்கு பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் மேலும் கூறினார்.

சுகாதார ஆலோசனைகள் மீறப்படுவதை தொடர்ந்தும் அவதானிக்கும் பட்சத்தில் இலங்கையில் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

No comments: