News Just In

11/21/2021 06:43:00 PM

சீனாவின் சேதனப்பசளைக் கப்பல் தொடா்பில் தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க இலங்கை அரசாங்கம் தீா்மானம்!

சீனாவின் சேதனப்பசளைக் கப்பல் தொடா்பில் தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க இலங்கை அரசாங்கம் தீா்மானித்துள்ளது.

இதன்படி சீன நிறுவனம் கோரிய நிதியில் 75 சதவீதத்தை அதாவது 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அத்துடன் அதே நிறுவனத்திடம் இருந்து புதிய பசளைகளை கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தொிவித்துள்ளார். இந்த பிரச்சனையில் ராஜதந்திர உறவுகளை பாதிக்க இடமளிக்கமுடியாது என்று அமைச்சர் கூறியுள்ளார். 

அனுமதியின்றி இந்தக்கப்பல் வந்துள்ளதாக இலங்கை தரப்பில் கூறப்பட்டது. எனினும் வங்கிக்கடன் கடிதம் திறக்கப்பட்டதால், கப்பல் நாட்டிற்கு வந்துள்ளதாக சீன நிறுவனம் கூறியுள்ள நிலையிலேயே தற்போது முரண்பாடு எழுந்துள்ளதாக அவர் தொிவித்துள்ளார்..

இந்தநிலையில், சீன நிறுவனம் தமது கப்பலை திரும்ப அழைக்கவும், மாதிரிகள் மீது முறையான சோதனைக்குப் பின்னா் புதிய சேதனப்பசளைகளை வழங்கவும் இணக்கம் வெளியிட்டுள்ளது .

இதேவேளை ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ஒரு மெட்ரிக் தொன் பசளையை 446 டொலா்கள் என்ற விலையில் கொள்முதல் செய்வதற்கான கட்டளை செய்யப்பட்டது. எனினும் தற்போது அதன் விலை 900 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக கூறிய அவர், எனவே, ஒப்பந்தத்தை ரத்து செய்வது அதிக செலவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உத்தேச தீர்வுத் திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தொிவித்துள்ளார்.

No comments: