News Just In

10/31/2021 07:15:00 AM

ஒருவரைக் கடத்தி ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரிய மூவர் கைது - கொழும்பில் சம்பவம்

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் மோலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிஸார் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்களால் வேனொன்றில் கடத்திச் செல்லப்பட்டு , மாபொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபா பணம் கோரிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடத்திச் சென்றவர்கள் குறித்த நபரின் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு இலட்சம் ரூபா பணம் கோரியுள்ளதோடு, பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டாம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் கடத்தப்பட்ட நபரின் மனைவி ஒரு இலட்சம் ரூபா பணத்தை கடத்தல்காரர்களால் வழங்கப்பட்ட தனியார் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் குறித்த நபருக்கு 1000 ரூபாய் பணத்தை வழங்கி அவரை மாபொல பிரதேசத்தில் வீதியொன்றில் விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த நபர் வீட்டுக்கு வருகை தந்துள்ளதோடு , பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் இருந்துள்ளார்.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் இது தொடர்பில் அவர் முறைப்பாடளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பணம் வைப்பிடப்பட்ட வங்கி கணக்கு உரிமையாளர் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 28, 35 மற்றும் 44 வயதுகளையுடைய வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். கிராண்ட்பாஸ் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments: