News Just In

8/29/2021 08:54:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீர் சுற்றிவளைப்பு நெல் களஞ்சியங்களுக்கு சீல் வைப்பு- பலருக்கு எதிராக வழக்குகள் பதிவு...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நுகர்வோர் அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நெல் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டமை தொடர்பாக பல வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டதுடன், பல நெல் களஞ்சியங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

நாடு பூராகவும் நெல் தட்டுப்பாடு தொடர்பான ஆய்வில் இச் சுற்றிவளைப்பு நடாத்தப்பட்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நுகர்வோர் அதிகார சபையினர் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பதிவு செய்யப்படாத நெல் களஞ்சியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்புகளை 25, 26, 27, 28 ஆம் திகதிகளில் மேற்கொண்டனர்.

இதன் போது பல ஆயிரக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்தமைக்கு களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இந்நிலையில் மனிதாபிமானமின்றி ஒரு சில வியாபாரிகள் அரசாங்கத்தின் நிர்வாக நடைமுறையை கண்டுகொள்ளாமல் தங்களது வியாபார தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட வரையறைக்கு உட்பட்டு இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே,கருணாகரன் வழங்கிய ஆலோசனைக்கமைய இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்.எப்.அன்வர் சதாத் மேலும் தெரிவித்தார்.










No comments: