News Just In

8/18/2021 10:25:00 AM

நாட்டை முடக்கினால் அது ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதால் அரசு நாட்டை முடக்குவதற்கு அஞ்சுகிறதா?


(எப்.முபாரக்)
நாட்டை முடக்கினால் அது ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதால் அரசு நாட்டை முடக்குவதற்கு அஞ்சுகிறதா? என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொவிட் தொற்று பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் அதன் இறப்பு வீதம் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடக்கூடியளவில் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில் வைத்திய நிபுனர்கள், பேராசியர்களென வைத்தியத்துறையுடன் சார்ந்த பலரும் நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும் அரசாங்கம் விறுமாம்புடன் விடாப்பிடியாக இருப்பதன் நோக்கம்தான் என்ன?

நாட்டை முடக்கி நாட்டு மக்களை பாதுகாக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனமும் பரிந்துரை செய்துள்ள நிலையிலும் நாளாந்த கூலித்தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்கள் என ஒருபுறமும் நாட்டை முடக்க அரசு தயாராக இருக்கிறது ஆனால் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என்று மறுபுறமும் அரசாங்கம் கூறுவது நகைப்புக்குரியதாகும்.

நாட்டை முடக்கும் பட்சத்தில் மக்களுக்கு பணம், உலர் உணவு போன்ற நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும். ஆனால் இவற்றை வழங்குவதற்கு அரசிடம் நிதி இல்லை. இவற்றை வழங்காத பட்சத்தில் மக்களின் எதிர்ப்பை அரசாங்கம் மேலும் சம்பாதிக்க வேண்டி வரும் இது ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலும் என்பதால் அரசு நாட்டை முடக்க அஞ்சுகிறது.

நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களை பலி கொடுத்துவருவதானது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். அரசின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக இன்றைய நிலையில் அனைத்து மக்களது எதிர்ப்பினை மாத்திரமல்லாது அரசை ஆட்சிபீடமேற்றிய மகாசங்கத்தினரது எதிர்ப்பினையும் அரசாங்கம் சம்பாதித்து நிற்கிறது. எனவே அரசாங்கம் உடனடியாக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து வைத்திய நிபுணர்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி நாட்டு மக்களை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். எனவும் சீனாவிடமிருந்து கடன் கிடைத்ததும் நாட்டை முடக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: