News Just In

7/01/2021 11:51:00 AM

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் கால்நடை பண்ணைகள் அமைக்கப்படும்- அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் முடிவு!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நஞ்சற்ற உற்பத்திற்காக சேதனப் பசளையினை பயன்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை மாலை 30.06.2021 நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கால்நடைகள் இராஜாங்க அமைச்சர் டி.பீ. ஹேரத் கலந்து கொண்டார்.

இதன்போது மாதிரி பண்ணைகளை அமைத்து அதிலிருந்து பால் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கச் செய்வது, கால்நடைகளுக்கான உணவினை அதிலேயே உற்பத்தி செய்தல், பண்ணையிலிருந்து சேதனப் பசளைகளை உற்பத்தி செய்து அதனை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது குறித்தும் ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, கரடியனாறு, கிரான், மயிலத்தமடு ஆகிய பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர், உஹனை, திருக்கோவில், தெஹியத்தகண்டி ஆகிய பகுதிகளிலும் பண்ணைகளை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுது.

கிழக்கு மாகாணத்தில் சுமார் மூன்று இலட்சம் கால்நடைகள் காணப்படும் நிலையில் அவற்றினையும் உச்ச நிலையில் பயன்படுத்துதல் குறித்தும், புதிய கால்நடைப் பண்ணைகளை அமைத்தல் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், மில்கோ நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்ட விடயத்துடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.







No comments: