News Just In

5/09/2020 07:41:00 PM

பாடசாலை ஆரம்பித்தலும்-மட்டு மேற்கு மாணவர்களுக்குள்ள சிக்கல்களும்...


(படுவான் பாலகன்) 
இலங்கை நாட்டில் கொவிட் 19, கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறைகள் வழங்கப்பட்டன. விடுமுறையை தொடர்ந்து ஏப்ரல் 20ல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டமையினால் பாடசாலைகளை உரிய திகதிகளில் ஆரம்பிக்க முடியாது போனது. இப்போது எதிர்வரும் 11ம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டு அரச, தனியார் நிறுவனங்கள் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் சூழலில், பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதான உத்தியோக பூர்வ அறிவித்தல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

ஆனாலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான கருத்தறிவுகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் தொடர்பிலான கருத்தறிதலும், ஆலோசனையும் நிறைவுபெற்றிருப்பதுடன், கிராமிய பாடசாலைகளை வலயக்கல்விப் பணிப்பாளர்களின் கருத்தறிதலுடன் ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.

சுகாதார திணைக்களத்தின் ஆலோசனைகளுடன் பாடசாலைகள் ஆரம்பிப்பதனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றதாக குடிநீர் வசதியும் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுகிறது. இக்காலநிலையின் காரணமாக கிணறுகளிலும், சிறுசிறு குளங்களிலும் நீர்வற்று ஏற்பட்டிருக்கின்றது. இதன்காரணமாக குடிநீர் பிரச்சினை தற்கால சூழலில் மேலெழுந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், அதிகஸ்ட, கஸ்ட பாடசாலைகளை முழுமையாக உள்ளடக்கிய வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளது. இவ்வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் குடிநீர் வசதியைக் கொண்டதல்ல. இங்குள்ள பாடசாலைகள் அமைந்துள்ள பெரும்பாலன பகுதிகள் வரண்ட மண்ணையும், கருங்கற்பாறைகளையும் நிலத்தில் கொண்டவையாகும். 

இதனால் இங்கு கிணறுகள் அமைப்பதென்பது இலகுவானதல்ல. அதேவேளை அவ்வாறு கிணறுகள் அமைத்தாலும், கிணறுகளில் வருடாந்தம் ஜீன் மாதத்தின் பின்னர் நீரை பெற்றுக்கொள்வதென்பதும் மிகவும் கடினமான நிலையே. தாழ்வான பகுதிகளில் அமைக்கப்பட்ட ஒருசில கிணறுகளில் மாத்திரமே குடிப்பதற்கான நீரினை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. இதேவேளை இப்பகுதியில் அமைந்துள்ள உன்னிச்சைக் குளத்தில் இருந்து மாவட்டத்தின் நகர்பகுதிக்கு குடிநீர் செல்கின்ற நிலையில், குளம் அமைந்துள்ள குறித்த படுவான்கரை பிரதேச மக்களுக்கு இன்னமும் முழுமையாக அக்குடிநீர் கிடைக்கப்பெறவில்லையென்பதும் சாவக்டே.

கிணறுகள் மூலமாக குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத அதேவேளை, குழாய்கள் மூலமாகவும் குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழல், பாடசாலை மாணவர்களிலும் தாக்கத்தினைச் செலுத்துகின்றன. இது வழமையானதொன்று என்றாலும் கூட, தற்கால கொரோனா தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான சுகாதார நடைமுறையில் குடிநீரை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமை இருப்பதென்பதும் சவாலே. சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்காக நிதியொதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் மாணவர்களுக்கு இருக்க கூடிய பிரச்சினைகள் தொடர்பில் வெளிக்கொண்டுவர வேண்டிய தேவையும் தற்போதைய சூழலில் எழுந்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால், பாடசாலைக்கு மாணவர்கள் காலை 7.30மணிக்கு முதல் சமூகம் கொடுக்க வேண்டும். அந்நேரத்திற்கு முன்பதாக பாடசாலைக்கு செல்ல வேண்டுமாகவிருந்தால், மாணவர்கள் 5மணிக்கு முன்னமே எழுந்து காலைகடன்களை முடித்து வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். ஏனெனில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள சில பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு கிராமத்தில் இருந்து மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் கொடுப்பதில்லை. பல கிராமங்களில் இருந்தே சமூகம் கொடுக்க வேண்டும். கிராமங்கள் என்றாலும் நகர்புறங்களைப்போன்று உள்ள கிராமங்கள் போன்றதுமல்ல, நகர்புறங்களை போன்று அருகருகில் வீடுகளும் அல்ல. ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீடு 1கிலோ மீற்றருக்கு அப்பாலும் உள்ளது. 

பாடசாலைக்கும் வீடுகளுக்கும் இடையிலான தூரம் 4கிலோ மீற்றர் கடந்தும் உள்ளது. இப்பகுதியில் பொதுப்போக்குவரத்துக்களும் மிகமிக அரிதே. இதனால் நடந்தும், துவிச்சக்கரவண்டியிலுமே பாடசாலைக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு ஒரு மணித்தியாலயம் தேவைப்படுகின்ற நிலையும் இருக்கின்றது. அதேநேரம் ஓரிரு கிணறுகளில்தான் சுற்றியிருக்கும் அனைத்து மாணவர்களும் குளிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலே கிணற்றினை நோக்கி செல்ல வேண்டும். கிணற்றுக்கும் வீட்டுக்கும் இடையில் பற்றைகளும், காடுகளும், வயல்நிலங்களும் காணப்படும். அவற்றினை கடந்துதான் செல்லவேண்டியும் உள்ளது. அங்கு சென்றாலும் ஓரிருவர் குளிக்க மற்றவர்கள் அவர்கள் குளித்து முடியும் வரை பார்த்திருக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட நேரம் செலவாகும். அவ்வாறு சிலர் குளித்துக்கொண்டிருக்கும் போது, கிணற்றில் நீர் வற்றிவிடும். திரும்பவும் கிணற்றில் நீர் ஊறும் வரை பார்த்திருக்க வேண்டும். 

இவ்வாறு பல சிக்கல்கள், சிரமங்கள் குளிக்கும் நீரில் இருக்கின்றன. அதேவேளை அக்கிணற்றில்தான் குடிநீரையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலை ஒருநேரம் குளிப்பதென்பதையே சவாலாக்கியுள்ளது என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. அவ்வாறு குளித்து, பாடசாலைக்கு வந்துசேருகின்ற நேரம் பிள்ளைகளுக்கு வியர்வையும் ஏற்பட்டுவிடும். அத்தோடு தாகமும் ஏற்படும்.

வறட்சி காலம் என அறிவிக்கப்பட்டதன் பின்பு பிரதேச சபையினால் பொது இடங்களில் நீர்த்தாங்கிகள் வைத்து குடிநீர் வழங்குவர். அதனை பெற்றுக்கொள்வதற்கும் வரிசையாக நிற்க வேண்டியவர்களாவர். அவ்வாறு பெற்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொண்டாலும் குளிப்பதற்கான நீரினைப் பெற்றுக்கொள்வதும் சிரமமாகவே அமைவதுண்டு. பாடசாலைகளில் ஏதோவொரு வகையில் குடிநீரை வழங்கினாலும், வீடுகளில் இருக்கக்கூடிய, குளிநீர், குடிநீர் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தினையும் தற்கால சூழல் ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவேண்டியதும் மிகமுக்கியமே.

No comments: