கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இவ்வருடமும் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருந்து சுமார் 6000 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக சிலாபம், லுனுவிலை வேகட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் பண்டார தெரிவானார். இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 47.53 செக்கன்களைப் பதிவு செய்த ரவிந்து, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்த நிலையில் வருடத்தின் அதி சிறந்த பெண் மெய்வல்லுனராக 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.48 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்ற ராஜகிரிய கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷெலிண்டா ஜென்சன் தெரிவானார்.
116 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளுக்காக 12, 14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய 5 வயதுப் பிரிவுகளின் கீழ் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்முறை விளையாட்டு விழாவில், ஆண்கள் பிரிவில் 27 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 25 போட்டிச் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.
35 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் நிலைநாட்டப்பட்ட அதிக போட்டிச் சாதனையாகவும் இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. 35 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 1228 புள்ளிகளைக் குவித்த மேல்மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. 501 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 437 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வடமேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
கடந்த காலங்களைப் காட்டிலும் இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 6 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 18 பதக்கங்களை வென்றனர். இதேவேளை 156 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வட மாகாண அணி தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் 6ஆவது இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
11/04/2019 05:37:00 PM
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் சிறந்த வீரர்கள் தெரிவு
Subscribe to:
Post Comments (Atom)



No comments: