
மன்னார்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை அடிக்கு முன்பு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
நினைவேந்தல் உரிமை
திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், பொலிஸாரின் செயலைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதையை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதய சந்திரா,சங்க பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழில் இன்று(28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இறுதி நாள் நிகழ்வுகள்
தியாக தீபத்தின் நினைவாலயம் பகுதியில் தியாக தீபத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி சிலை வைக்கப்பட்டு , தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, கடந்த சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நினைவிவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் , இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.
பொலிஸாரினால் சிலை பெயர்த்து எடுத்து செல்லபப்ட்டதனை கண்டித்தும் , மீள அந்த சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
No comments: