
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புகளுக்காக மருத்துவ சிகிச்சை பெறும் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை, நேற்று இரவு நிலவரப்படி 400-ஐ நெருங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது.
பார்வை தொடர்பான பிரச்சினை
பாதிக்கப்பட்டவர்களில் தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உட்பட பாடசாலை மாணவர்களும் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments: