News Just In

4/07/2026 04:33:00 PM

பாராட்டும் கௌரவிப்பும்: நிந்தவூர் அல்-மஸ்ஹர் மகளிர் பாடசாலை வரலாற்றுச் சாதனை

பாராட்டும் கௌரவிப்பும்: நிந்தவூர் அல்-மஸ்ஹர் மகளிர் பாடசாலை வரலாற்றுச் சாதனை



நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 51 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் வாய்ப்பை அடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் அதிகளவான பல்கலைக்கழக அனுமதிகளைப் பெற்ற பாடசாலையாக இப்பாடசாலை முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை முன்னிட்டு மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி பாடசாலை அதிபர் ஏ.சி. ஹாமிது தலைமையில் கலாநிதி அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பெறுபேறுகளின் படி, மருத்துவத் துறைக்கு 03 மாணவிகளும், பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக பொறியியல் துறைக்கு 01 மாணவியும் தெரிவாகியுள்ளனர். மேலும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 22 மாணவிகளும், வர்த்தகப் பிரிவில் முகாமைத்துவத்திற்கு 09 மாணவிகளும், வர்த்தகத்திற்கு 05 மாணவிகளும், கலைப் பிரிவில் சட்டத் துறைக்கு 01 மாணவியும், ஏனைய துறைகளுக்கு 10 மாணவிகளும் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய அதிபர் ஏ.சி. ஹாமிது, பாடசாலை அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், கல்முனை கல்வி வலயத்தில் முன்னணி பாடசாலையாக திகழ்கின்றதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு உயர்தரப் பெறுபேறுகளில் 300 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இந்த சாதனைக்கு காரணமாக இருந்த மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள், நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து தொடர்புடையோருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் பொறியியலாளர் ஏ.எம். ஹைகல், முன்னாள் அதிபர் திருமதி ஹானியா சித்தீக், பாடசாலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர் திருமதி எம்.வை. நஜிமுன்நிஷா, முன்னாள் சிரேஷ்ட ஆசிரியர் எஸ்.எம். ஜின்னாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: