News Just In

2/07/2026 05:38:00 AM

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேசப் பற்றாளர்களாக அங்கீகரிக்க புத்தசாசன அமைச்சர் இணக்கம்

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேசப் பற்றாளர்களாக அங்கீகரிக்க புத்தசாசன அமைச்சர் இணக்கம்



நூருல் ஹுதா உமர்

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான விவகாரத்தில், அவர்களை தேசப் பற்றாளர்களாக உரிய முறையில் அங்கீகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (06) பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரை தனித்தனியே சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

முதற்கட்டமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தேச விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்ட பல முஸ்லிம் வீரர்கள் வரலாற்று அநீதியின் காரணமாக ‘தேசத் துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்டிருந்த பின்னணியை எடுத்துரைத்து, இவ்விவகாரம் தொடர்பான விரிவான விளக்கங்களை முன்வைத்தார். இதன்போது, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இவ்விடயத்தை முன்னெடுத்து நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஊடகப்பிரிவு வெளியிட்ட செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களை சந்தித்து மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது, ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய முஸ்லிம் வீரர்கள் ‘தேசத் துரோகிகள்’ என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை தேசப் பற்றாளர்களாக மீள அங்கீகரிப்பது வரலாற்று நீதிக்கான அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பான முழுமையான ஆவணங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள் உள்ளிட்ட தேவையான தகவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் கையளிக்கப்பட்டதாகவும், இதற்கு பதிலளித்த அமைச்சர் உரிய சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாகவும் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இதற்கு முன்னரும் பல தடவைகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இவ்விடயம் தொடர்பில் கடந்த பல ஆண்டுகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான கலிலூர் ரஹ்மான், ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி உட்பட பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக குரலெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: