திருகோணமலையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: தம்பதி உட்பட நால்வர் காயம்

திருகோணமலையிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று மதியம் மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் காயங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து ஏறாவூர் நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த மேலும் இருவரும் என மொத்தம் நால்வர் காயமடைந்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சம்பவ இடத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்ததை காண முடிந்தது.
காயமடைந்த நால்வரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனங்களுக்கு இடையிலான போதிய இடைவெளி பேணப்படாமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: