
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தங்கள் படைகளை அங்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளன.
ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது, 13 பேர் கொண்ட ஜேர்மன் இராணுவ (Bundeswehr) ரகசிய ஆய்வு குழு கிரீன்லாந்தின் தலைநகரான Nuuk-க்கு வியாழக்கிழமை அனுப்பப்படுகிறது.
டென்மார்க்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியில் பங்களிக்கக்கூடிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே அணுசக்தி நாடான பிரான்ஸ் தனது படைகளை அனுப்புவதாக உறுதி செய்துள்ளது.
இது, அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் இடையிலான வாஷிங்டன் உயர் மட்ட சந்திப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும்.
ஸ்வீடன் கூட இந்த ஐரோப்பிய இராணுவ நடவடிக்கையில் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.
டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசன், “அமெரிக்க ஜனாதிபதி கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால் இது முற்றிலும் தேவையற்றது” எனக் கூறியுள்ளார்.
கிரீன்லாந்தில் ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்பும் முடிவு, ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிக்கும் சூழ்நிலையில், ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில் உள்ளது.
No comments: