நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஆறு மாணவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி, காரைதீவு-மாவடிப்பள்ளி பிரதான வீதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உழவு இயந்திரம் தடம் புரண்டு வெள்ள நீரில் சிக்கி ஷஹீதானதைத் தொடர்ந்து, அவர்களது சுஹதாக்கள் நினைவு தினம் (29) கல்லூரி வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் எம்.ஏ.எம். றஸீன் அவர்களின் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்-ஷூரா சபையின் தலைவர் ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷெய்க் எம்.ஐ. அமீர் (நளீமி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
மேலும், கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சம்மாந்துறை கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். பஷீர் (மதனி), விசேட அதிதியாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் றம்ஸீன் காரியப்பர் (தப்லீகி) உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் போது, ஷஹீதான மாணவர்களின் ஞாபகார்த்தமாக காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஆளுநர் சபையின் உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினருமான தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் எம். எல். சம்சுன் அலி அவர்களினால் சுமார் 17 லட்சம் ரூபாய் பெறுமதியான கட்டில்கள், அலுமாரிகள் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட தளபாடங்கள் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், இவ் அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில் வெள்ள நீருக்குள் “வெண்புறாக்கள்” நினைவு மலர் வைபவ ரீதியாக வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், அந்த அனர்த்தத்தின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஆளுநர் சபை உறுப்பினருமான ஏ. இப்திகார் அஹமட், கல்லூரி செயலாளர் அஷ்-ஷெய்க் அர்ஷாத் (காஷிபி) உட்பட பெருந்தொகையானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
No comments: