(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில், சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட, குடும்பங்களுக்கும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் முன்னுரிமை அளித்து ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சேர்க்கிள் (CIRCLE) இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.
அவசர நிவாரண உதவியின் கீழ் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் கிராம நிர்வாக அலுவலர் பிரிவில் உள்ள 80 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, நெத்தலிக் கருவாடு, ரின் மீன், பருப்பு, தேயிலை உள்ளிட்ட உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, ஏறாவூர் 4ஆம் குறிச்சி, களுவங்கேணி, ஆறுமுகத்தான்குடியிருப்பு ஆகிய கிராம நிர்வாக அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 122 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 134 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பால்மா, உணவு அல்லாத நுளம்பு வலை, ஆரோக்கியத் துவாய்கள், வெந்நீர் போத்தல் உட்பட சுமார் மூவாயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் யுனொப்ஸ் United Nations Office for Project Services “விருத்தி” திட்டத்தின் நிதி அனுசரணையில் சேர்க்கிள் நிறுவனத்தின் அமுலாக்கத்துடன் இந்த இடர் நிவாரணப் பொதிகள் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நெருக்கடிமிக்க காலங்களில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கும், தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஆதரவாக நிற்பதில் (CIRCLE) இளம் பெண்கள் அமைப்பு கரிசனை கொண்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிவாரண விநியோகம் கிராம அலுவலர்கள், பொதுச் சுகாதார மருத்துவிச்சிகள், மகளிர் மேம்பாட்டு அதிகாரிகள், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரின் ஆதரவுடனும் முழுமையான ஒத்துழைப்புடனும் இடம்பெற்றது.
No comments: