News Just In

12/30/2025 07:23:00 PM

ஜித்தா கொன்ஸல் ஜெனரல் நியமனம் : அரசின் நடவடிக்கை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

ஜித்தா கொன்ஸல் ஜெனரல் நியமனம் : அரசின் நடவடிக்கை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்




நூருல் ஹுதா உமர்
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிற்கான இலங்கை கொன்ஸல் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிக்கும் அரசின் நடவடிக்கை உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜித்தா நகரிற்கான கொன்ஸல் ஜெனரலின் கடமைகள், வழக்கமான இராஜதந்திர பணிகளுக்கு அப்பால், ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளுக்காக சவூதி அரேபியா பயணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் நலன்களை ஒருங்கிணைப்பதும், மேற்பார்வை செய்வதும், புனிதப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்து தேவையான பணிகளை முன்னெடுப்பதும் ஆகும். இத்தகைய மத, கலாசார உணர்வுகளுடன் நேரடியாக தொடர்புடைய பொறுப்புகள் குறித்த நுண்ணுணர்வு இப்பதவிக்கு அத்தியாவசியமானதாகும்.

ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில், 1998 ஆம் ஆண்டு அன்றைய அரச தலைவரின் உத்தரவின் பேரில் ஜித்தாவில் கொன்ஸல் ஜெனரல் அலுவலகம் நிறுவப்பட்டது. அதன் முதலாவது கொன்ஸல் ஜெனரலாக வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அலீ ஸப்ரி நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து பல முஸ்லிம் அதிகாரிகள் இப்பதவியை வகித்துள்ளனர். இது ஒரு தனிப்பட்ட நடைமுறை அல்ல; மத, கலாசார உணர்வுகளை மதிக்கும் ஒரு இராஜதந்திர மரபாகவே இதுவரை பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

ஏற்கனவே நுரைச்சோலை வீடமைப்பு பகிர்ந்தளித்து விடயத்திலும் அதிருப்தி நிலைப்பாட்டை கொண்டுள்ள அரேபிய தலைவர்களுக்கு தற்போது வெற்றிடமாக உள்ள இப்பதவிக்காக மரபிற்கு மாற்றமாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிப்பது மேலும் எமது நாட்டு ஜனநாயகம் பற்றிய பிழையான எண்ணங்களை தோற்றுவிக்கும். இந்த செயலானது முஸ்லிங்களுக்கு மட்டுமல்ல நாட்டை நேசிக்கும் இலங்கையர்களுக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இந்த இராஜதந்திர மரபை மீறும் நடவடிக்கை, இலங்கை – சவூதி அரேபியா இருதரப்பு நட்புறவிலும், குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மனநிலையிலும் தேவையற்ற கலங்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் எங்களது கட்சி சுட்டிக்காட்டுகிறது.

அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட இல்லாத தற்போதைய சூழலில், இவ்வாறான நுண்ணிய விடயங்களை அந்த மட்டத்தில் எடுத்துச் சொல்லி தெளிவுபடுத்தும் வாய்ப்பு இல்லாமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும் முஸ்லிம் சமூகத்தினர் தமது சமய, கலாசார உரிமைகள் மற்றும் உணர்வுகளை மலினப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஹஜ் – உம்ரா யாத்திரைகளுடன் நேரடியாக தொடர்புடைய ஜித்தா கொன்ஸல் ஜெனரல் பதவியில் மத, கலாசார உணர்வுகளை புரிந்து செயல்படக்கூடிய ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாகும்.

எனவே, இந்த விடயத்தை உடனடியாக அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு, உரிய தீர்மானத்தை துரிதமாக மேற்கொள்ளுமாறும் இப்படியான விடயங்களில் அரசு மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது

No comments: