News Just In

11/24/2025 07:28:00 PM

Social Media மட்டுமல்ல களத்திலும் இறங்குவோம்..! திருகோணமலையில் வீதிக்கிறங்கிய இளைஞர்கள்

Social Media மட்டுமல்ல களத்திலும் இறங்குவோம்..! திருகோணமலையில் வீதிக்கிறங்கிய இளைஞர்கள்




திருக்கோணமலை மாநகர சபை வாயிலில் கண்களை கருப்பு துணியால் கட்டி இளைஞர்கள் சிலர் இன்றைய தினம் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக இளையோரின் கல்வி, வேலை வாய்ப்பு, திறன் விருத்தி சார்ந்து பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற "தளம்" அமைப்பின் கட்டிடம் தொடர்பில் முறையற்ற, சட்ட முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,

இளையோரின் தொழில் முயற்சிகளை தடை செய்யும் ரீதியில் திறந்த கேள்வி கோரப்பட்ட குத்தகை கேள்விகளின் விண்ணப்ப படிவங்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்த செயற்பாடுகள் தொடர்பிலும்,

குத்தகை கேள்வி கோரப்பட்ட கட்டிடத்தொகுதிகளுக்கு முறையற்ற விதத்தில் குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டமை தொடர்பிலும், நகரின் அபிவிருத்தி மற்றும் உரிமை சார் பொதுமக்கள் நம்பிக்கைகளை மீறி, கவனயீனமாக செயல்படுவது தொடர்பிலும், கட்டாகாலி மாடுகள் காரணமாக ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த தவறுவது தொடர்பிலும், திருக்கோணமலை பேருந்து நிலையம் போன்ற பொதுச் சொத்துக்களில் கவனமின்றி செயல்படுவது தொடர்பிலும் கண்டனம் தெரிவித்து இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுமார் 50க்கும் மேற்பட்ட இளையோர் கலந்துகொண்டு எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

பின்னர் மாநகர சபைக்குள் அமைதியான முறையில் உள் நுழைந்த இளைஞர்கள் மாநகர சபை முதல்வர் மற்றும் மாநகர சபை ஆணையாளரை சந்திக்க கோரிக்கை விடுத்தனர்.

இருந்த போதிலும் காவலாளியால் மாநகர சபை ஆணையாளர் இல்லை என பொய் கூறியமையால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முரண்பாடான நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநகர சபை ஆணையாளர் கலந்துரையாடல் மேற்கொள்ள இளைஞர்கள் மூவரை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில் முடிவு எட்டப்படும் என தெரிவித்ததன் அடிப்படையிலும், மாநகர சபையின் நடவடிக்கைகளில் சில தவறுகள் விடப்பட்டமை தொடர்பிலும் குறிப்பிட்டு கவனயீர்ப்பை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் நாகர்ஜுன் குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் சபை அமர்வில் கலந்துரையாடி முடிவெடுப்பதாக உறுதியளித்தார்.




No comments: