நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் சுகாதார குழுவினரால் வெள்ள அபாயத்துடன் தொடர்பான சிறப்பு களவிஜயம் இன்று 2025.11.25 மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்திருப்பதை கருத்தில் கொண்டு, குறிப்பாக நிறைமாத கர்ப்பிணிகள், வயோதிபர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு முன்னெச்சரிக்கையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், சாய்ந்தமருது பிரதேச செயலாளருடன் ஒருங்கிணைந்த கலந்துரையாடலின் பின்னர், மக்கள் பாதுகாப்பாக தங்கக்கூடிய வகையில் அல்-ஹிலால் பாடசாலை தற்காலிக பாதுகாப்பு முகாமாக தெரிவு செய்யப்பட்டது. தேவையான தங்குமிடம், சுகாதார வசதி, குடிநீர், சுத்தம், பாதுகாப்பு ஆகியன உறுதிப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பாதுகாப்பு முகாமில் பொதுமக்கள் தங்கியிருக்கும் காலப்பகுதியில் எந்தவித சுகாதார பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் அடிப்படை மருத்துவ சேவைகள், அவசர சிகிச்சை வசதிகள், மருந்துகள், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்டவை சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் முன்கூட்டியே ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கள விஜயத்தின் போது, வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்கள் தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து செல்வதன் அவசியம் குறித்து சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் வலியுறுத்தினார். மேலும், ஒவ்வொரு வீட்டிலும் முக்கிய ஆவணங்கள், குழந்தைகளின் தேவைகள், அவசர மருந்துகள், குடிநீர், உலர்ந்த உணவு போன்றவற்றை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments: