News Just In

10/01/2025 10:12:00 AM

பேராசிரியர்களால் நிறையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்!

பேராசிரியர்களால் நிறையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்



1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.ஓர் இனத்தின் தனித்துவத்தை எடுத்துக் கூறுவதில் கல்விச்சாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் காத்திரமான வகிபங்கை ஆற்றுகின்றன.அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எம் தமிழினத்தின் ஒரு பெரும் கல்விச் சொத்துதமிழ் மாணவர்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று இனத்துவத்தை இழந்து நிற்கிறது.

. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையால் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுத்தானாக வேண்டும்.எனினும் எங்கள் தமிழ்
மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கானசந்தர்ப்பத்தை இல்லாமல் செய்தவர்கள் நம்மவர்களேயன்றி, சிங்களவர்கள் அல்ல என்ற உண்மை யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலில் எழுதப்பட வேண்டும்.
இஃது ஒருபுறமிருக்க, இப்போதுயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பகதரு போல பேராசிரியர்கள் குவிந்த வண்ணமுள்ளனர்.முன்பெல்லாம் வருடக்கணக்காகிய பேராசிரியர் பதவிகள் இப்போது நாளொறும் அறிவிக்கப்படுகின்றன.

விரிவுரையாளர்களின் கல்வித் தரம் மற்றும் பட்டப்பின் படிப்புகள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலான கற்றல்கள் என்பன வேகமாகும்போது, அவர்கள் பேராசிரியர் பதவிக்குரிய தகைமையைப் பெற்றுக் கொள்கின்றனர். இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டும்.
அதிலும் மிகக்குறைந்த வயதில் பேராசிரியர் பதவியைப் பெறுவதென்பது எங்களின் கல்வித் தகைமைக்கான சான்றாக அமையும்.
அதேநேரம் மாணவர்களின் கல்விக்கும் அது ஊக்க சக்தியாக இருக்கும் என்பதால், பேராசிரியர் பதவிகளைப் பெற்ற அத்தனை பேரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

அதேநேரம் பேராசிரியர்களால்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிரம்பி வழிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தடக்கி விழுந்தாலும் அது ஒரு பேராசிரியர் மீது விழுவதாகவே இருக்கும்.நிலைமை இதுவாயின், எங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எங்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பில் - எங்கள் தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியில் - எங்கள் மருத்துவத் துறையில் - ஆய்வுத் துறையில் பின்தங்கி வாழுகின்ற எம் மக்களின் உயர்வில் பேராசிரியர்களின் பங்கும் பணியும் எவ்வாறாக உள்ளன என்ற கேள்வி எழுவதில் நியாயம் இருக்கவே செய்யும்.
ஆம், நாளுக்கு நாள் பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதாயினும் எம் மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னமும் ஏற்ற முறாமல் இருக்கிறதெனில், பேராசிரியர்களின் பணிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற எல்லைக்குள் இருக்கக்கூடிய விரிவுரை மண்டபங்களுடன் மட்டுப்படுத்தப் பட்டுள்ளனவா? என்ற ஐயம் எழவே செய்யும்.எனவே மேன்மைக்குரிய பேராசிரியப் பெருமக்களே! உங்களின் வாண்மை, உங்களின் ஆய்வுப்புலம் எங்கள் மக்களின் வாழ்வை உன்னதமாக்குவதிலும் கணிசமாகப் பயன்படட்டும் என்பதுதான் உங்களை நோக்கிய  தாழ்மையான கோரிக்கை

No comments: