நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் இருந்து காச நோயினை இல்லாதொழிக்கும் நோக்கில், பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்திற்கிணங்க காச நோயை கட்டுப்படுத்துதல் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளித்தல் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர்களின் திறனை மேம்படுத்து முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட திறன்விருத்தி பயிற்சி செயலமர்வு கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.
பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.ஏ.கபூர் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.ஏ.கபூர் குறித்த செயலமர்வின் நோக்கம் பற்றியும், காச நோய் தொடர்பாகவும் கடந்த கால புள்ளி விபரங்களுடன் விளக்கமளித்தார். அத்துடன் காசநோயை எதிர்காலத்தி பிராந்தியத்தில் முற்று முழுதாக இல்லாதொழிப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுவாச நோயியல் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஆர்.மன்மதன், அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலையின் சுவாச நோயியல் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஜீ.பி.அத்துகொரல, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் விஷேட நுண்ணுயிரியல் வைத்திய நிபுணருமான டாக்டர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ், பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எச்.எம்.டீ.மபாஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் வளவாளர்களாக கலந்து கொண்டு காசநோய் தொடர்பாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது
No comments: