News Just In

4/20/2025 05:26:00 PM

பெண்கள் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையை இல்லாமலாக்கி வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் நோக்கம் வெற்றியளித்துள்ளது

பெண்கள் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையை இல்லாமலாக்கி வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் நோக்கம் வெற்றியளித்துள்ளது
சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பெண்கள், இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையை இல்லாமலாக்கி பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் நோக்கம் வெற்றியளித்துள்ளதாக சேர்க்கிள் (ஊசைஉடந) எனப்படும் இளம் பெண்கள் அமைப்பின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனைக் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், இளைஞர்கள், யுவதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பரிந்துரை வலையமைப்பின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தையல் ஆடையுற்பத்தி விற்பனை நிலையத்தை திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

“பொன்” நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சேர்க்கிள் நிறுவனத்தின் அமுலாக்கத்தில் சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரங்கள் மற்றும் தையலுக்குத் தேவையான உபகரணத் தொகுதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி, சேர்க்கிள் அமைப்பினால் 2023ஆம் ஆண்டு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் பலப்படுத்தப்பட்ட பரிந்துரை வலையமைப்பை ஸ்தாபித்து அதனூடாக தொழிலற்ற பெண்கள் இளைஞர் யுவதிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் சுயதொழில் முயற்சிக்கான செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் நோக்கம் பரிந்துரை வலையமைப்பு தொடர்ந்து இயங்கி அதனூடாக பெண்கள், இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை தீர்கச்கப்ட வேண்டும், பொருளாதாரம் வளமடைய வேண்டும், வாழ்வாதாரத்தை சிறப்படைய வேண்டும் என்பதேயாகும்.

அதனடிப்படையில் பரிந்துரை வலையமைப்பின் வேண்டுகோளின் பேரில், வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் சுய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்தற்கு ஊக்கத்தை அளிக்கும் முகமாக தையல் ஆடையுற்பத்தி விற்பனை நிலையம் திறந்து வைக்கப்படுகிறது.

மேலும் இந்த வலையமைப்பை வலுப்படுத்தும் வகையில் இளையோருக்கும் பெண்களுக்கும் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.” என்றார்.



நிகழ்வில் சேர்க்கிள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட வவுணதீவு, கிரான் ஆகிய பிரதேசங்களிலுள்ள பரிந்துரை வலையமைப்பின் உறுப்பினர்கள், இளம் பெண்கள் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் கே. ஜெயவாணி, கே. லக்ஷானா ஆகியோருட்பட பரிந்துரை வலையமைப்பிலுள்ள பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

No comments: