News Just In

4/08/2025 10:07:00 AM

அமெரிக்காவின் வரி விதிப்பால் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா!

அமெரிக்காவின் வரி விதிப்பால் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா!



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அமுலாக்கம் காரணமாக, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டிருப்பதாக நாணய பரிமாற்றுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு டொனால்ட் ட்ரம்ப் 44 சதவீத பரஸ்பர தீர்வையைக் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் பொருட்கள் சேவைகளுக்காக இலங்கை 88 சதவீத தீர்வையை அறவிடுகின்ற நிலையில், கழிவளிக்கப்பட்ட பெறுமதியாக 44 சதவீத தீர்வையை இலங்கை மீது விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவுடன் இந்த விடயத்தில் இலங்கை சரியான பேச்சுவார்த்தைகளை நடத்தாவிட்டால், இலங்கை ரூபாவுக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டு அதன் பெறுமதி மிகப்பெரிய அளவில் குறையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா போன்று அல்லாது, இலங்கையின் வர்த்தக இடைவெளி அதிக விரிசலுடன் இருப்பதன் காரணமாக, நாட்டுக்கு டொலரின் உள்வருகை கணிசமாகக் குறைவடையும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா விதித்துள்ள புதிய பரஸ்பர தீர்வையைக் குறைத்துக் கொள்வதற்கான யோசனைத் திட்டம் ஒன்று இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நாளையதினம் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு, அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளை இணையவழியில் சந்தித்துக் கலந்துரையாடி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் பிரதிநிதிகளால் வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த யோசனைத்திட்டம் தயாரிக்கப்படுவதாகவும், இலங்கையின் இறக்குமதி வரி கட்டமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த யோசனைத் திட்டம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments: