- வாகனங்கள் தொடர்பான பட்டியல் வெளியீடு
– கொள்வனவு, விற்பனை தொடர்பிலும் விதிமுறைகள்

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2024 டிசம்பர் 18ஆம் திகதி முதல் நேற்று (27) வரை ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்கு சுங்கப் பணிப்பாளருக்கு இதனூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1969ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) பிற்பகல் இந்த வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், 2024 டிசம்பர் 18ஆம் திகதி முதல் 2025 ஜூலை 31ஆம் திகதி வரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான இயலுமை காணப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனங்களைப் பதிவு செய்வதற்காக இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர், வரி செலுத்துவோருக்கான அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கம் உள்ளடங்கிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டுமென குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விதிமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வகையில் இறக்குமதி செய்யக் கூடிய வாகனங்களின் வகைகள் அடங்கியல் பட்டியல்களுக்கு அமைய மாத்திரமே இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் தவிர்ந்த ஏனைய நபர்களுக்கு ஒருவருட காலப்பகுதிக்குள் இவ்வாறு ஒரு வாகனத்தை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் 90 நாட்களுக்குள் உரிய கொள்வனவாளரின் பெயரில் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
No comments: