மட்டக்களப்பு – வவுணதீவுப் பிரதேசத்தில் நெல் வாங்கப் பயன்படுத்தப்பட்டுவந்த, அளவை நிறுவைக்குப் பொருத்தமில்லாத, அனுமதியற்ற 3 தராசுகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது வவுணதீவுப் பிரதேசத்தில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நெல் கொள்வனவு செய்யும் வர்த்தகர்களின் அளவை, நிறுவைக் கருவிகள் தொடர்பாக மாவட்ட செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய அளவைக் கருவிகளைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அவ்வேளையில் களத்திற்குச் சென்று பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் இவ்வாறு 3 தராசுகளைப் பயன்படுத்தி மோசடி செய்த வியாபாரிகளிடமிருந்து தராசுகளைக் கைப்பற்றியதோடு அவர்களைச் சட்ட நடவடிக்கைகக்கும் உட்படுத்தியுள்ளனர்.
இந்நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா வின் ஆலோசனைக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட பதில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பரிசோதகர் வீ.ஜீ.ரீ.ஆர். நீலவல தலைமையிலான திணைக்கள உத்தியோகத்தர்கள், வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உப தலைவர் அருளானந்தம் ரமேஸ், பிரதேச செயலக அலுவலர்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தராசுகள் சீல் வைக்கப்பட்டு, அளவீட்டு அலகுகள் நியமங்கள், சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
No comments: